தொழிற்பயிற்சி பெற்று அசத்தும் ஜாமிலாபாத் பெண்கள், கைகொடுக்கும் கைவினைக் கலைகள்

பெண்கள் தங்களது கைகளால் தாங்களே உருவாக்கும் இந்த கைவினைப் பொருட்களை விற்று பணம் ஈட்டுவது அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய தன்நம்பிக்கையை அளித்துள்ளது. தங்கள் குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் ஈட்டித் தர முடிந்ததால், அவர்களது மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 14, 2021, 06:02 PM IST
  • ஜாமிலாபாத் பெண்கள் வாழ்வாதாரத்திற்கான ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதத்தைப் பெற்றுள்ளனர்.
  • அதானி பெருநிறுவன உதவியுடன் அசத்தும் ஜாமிலாபாத் பெண்கள்.
  • தங்கள் குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் ஈட்டித் தர முடிந்ததால், பெண்களின் மகிழ்ச்சி அதிகரிக்கின்றது.
தொழிற்பயிற்சி பெற்று அசத்தும் ஜாமிலாபாத் பெண்கள், கைகொடுக்கும் கைவினைக் கலைகள் title=

திருவள்ளுவர் மாவட்டம், புலிகாட் கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள ஜாமிலாபாத் பெண்கள் வாழ்வாதாரத்திற்கான ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதத்தைப் பெற்றுள்ளனர். 

அதானி பெரு நிறுவன சமூக சேவை நிறுவனம், இங்குள்ள பெண்களுக்கு  திறன் மேம்பாடு மற்றும் புதிய சந்தை வாய்ப்புகளுக்கான தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

ஜாமிலாபாத் கிராமத்தில் சுமார் 430 இஸ்லாமிய குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால், இவர்களுக்கு தங்களுடைய அன்றாட செலவுகளை சமாளிப்பதே பெரும் போராட்டமாக இருந்து வருகிறது. இப்பகுதி மக்களின் நிலையை மேம்படுத்த, அதானி (Adani) பெருநிறுவனம் கடந்த சில வருடங்களாக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.

சமீபத்தில், இந்த நிறுவனம் ஜமிலாபாத் பெண்களுக்காக பனை ஓலை மூலம் பொருட்களை தயாரிக்கும் பயிற்சியை அளித்தது. இந்த பயிற்சி மார்ச் 12 முதல் ஏப்ரல் 11 வரை நடந்தது. இந்த பயிற்சியைப் பெற்ற பிறகு இப்பகுதி பெண்கள், பனை ஓலையாலான விதவிதமான பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் விற்கலாம். இப்பகுதி பெண்களும் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள விருப்பம் காட்டி வருவதோடு, பயிற்சியிலும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். 

தற்போது இந்த குழுவிற்கு பாத்திமா தலைவராகவும் ஆயிஷா பீவி பொருளாளராகவும் இருந்து செயல்படுகின்றனர். 2015 ஆம் ஆண்டு முதல், பரிசுப் பெட்டிகள், பூஜைத் தட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது இவர்களது குழு. அதற்காக, பனை ஓலை மற்றும் நிறப் பொடிகள் உள்ளிட்ட மூலப்பொருட்களை கிராமத்திற்கு வெளியில் சென்று வாங்குவது மற்றும் அவற்றை தகுந்த அளவிற்கு வெட்டி, நிறமிகளைச் சேர்த்து, உலர வைத்து பின்னர் முடைப்பது என பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் பொருள்கள் திருமணம், பிறந்த நாள் கொண்டாட்டம், விழாக்கள் உள்ளிட்ட சமூக மற்றும் மத நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இப்போது சிறிய அளவில் விற்பனை செய்துகொண்டிருக்கும் இக்குழுக்கள், கூடிய விரைவில் தங்கள் விற்பனையை விரிவு படுத்தப்போவதாகக் கூறியுள்ளன. 

சந்தையில் மக்களுக்கு தேவைப்படும் பொருட்களை ஆராய்ந்து தயாரிக்கும் இவர்களது பொருட்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கின்றது. புதிதாக இவர்களுக்கு பல வாடிக்கையாளர்கள் கிடைத்து வருவதுடன், இவர்களது பொருட்களின் தரமும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. 

ALSO READ: நாமக்கல்லில் நடுங்க வைக்கும் சம்பவம்: சிறுமி பாலியல் வன்கொடுமை, 12 பேர் கைது

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை பயன்படுத்திக் கொண்டுள்ள இந்த குழுக்கள், வாட்ஸ்அப்பில் (Whatsapp) குழு ஒன்றை துவங்கி தங்களுடைய பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. 

இது தவிர பலவித கண்காட்சிகளிலும் கலந்து கொள்ளும், இந்த பெண்கள், இவற்றின் மூலமும் தங்கள் வியாபாரத்தை பெருக்கிக்கொள்கின்றனர். இந்த கைவினைப் பொருட்கள் வீடிலிருந்தே செய்யப்படுவதால், இவற்றால் சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. 

பெண்கள் தங்களது கைகளால் தாங்களே உருவாக்கும் இந்த கைவினைப் பொருட்களை விற்று பணம் ஈட்டுவது அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய தன்நம்பிக்கையை அளித்துள்ளது. தங்கள் குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் ஈட்டித் தர முடிந்ததால், அவர்களது மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றது. 

தங்களது நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்த எண்ணிய ஜாமிலாபாத் பெண்கள், அதானி பெருநிறுவன அமைப்பின் உதவியால், தேவையான பயிற்சி எடுத்து தங்கள் இலக்கை எட்டுவதில் வெற்றி அடைந்துள்ளனர்.  பெண்கள் நினைத்து விட்டால், நடக்காதது எதுவுமில்லை என்பதை இப்பகுதி பெண்கள் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளனர். 

ALSO READ: தமிழகத்தில் ஆட்டம்போடும் கொரோனா, சென்னையில் 100 போலீசாருக்கு தொற்று

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News