‘இந்து அறநிலையத்துறையில் வெளிப்படைத்தன்மை இல்லை. கோவில்களைப் பராமரிக்க அவர்களால் முடியவில்லை. இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்கள் பராமரிப்பில்லாமல் கிடக்கின்றன. அதேபோல் புதிய கோவில்களைக் கைப்பற்றும் முயற்சியையும் இந்து அறநிலையத்துறை கைவிட வேண்டும். இனி அறங்காவலர்கள் பார்த்துக்கொள்வார்கள். கோவில்களைவிட்டு இந்து அறநிலையத்துறை முழுமையாக வெளியே வேண்டும்.!’
கடந்த ஆண்டு திருப்பூரில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா ஆற்றிய உரையின் சாராம்சம் இது.
மேலும் படிக்க | பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த ‘செக்’.!
தமிழ்நாடு முழுவதும் கோயில் புணரமைப்புப் பணிகளை இந்து அறநிலையத்துறை செய்து வருகிறது. ஆனாலும், இந்து அறநிலையத்துறை நடவடிக்கையின் மீது தொடர்ந்து பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்து அறநிலையத்துறையை கோவில்களைவிட்டு முழுமையாக அகற்றுவோம் என்று சூளுரைத்து அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கோவிலின் பராமரிப்பிற்காக, சொந்த வங்கிக் கணக்கின் மூலம் நிதி திரட்டிய தனி நபர் மீது முறைகேடு புகார் அம்பலமாகியுள்ளது.
இதனையறிந்த தமிழக போலீஸார் அந்த நபரை அதிரடியாக கைது செய்துள்ளனர். அந்தக் கைதுக்கு தற்போது பாஜக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எப்போதும் மவுனமாக இருக்கும் சுப்ரமணியன் சுவாமி கூட இந்த விவகாரத்தில் தலையிட்டு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருக்கிறார். யார் அந்த நபர் ? என்ன நடந்தது ?
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவிற்கு இந்தக் கோவில் வெகு பிரச்சித்திப் பெற்றது. இந்த கோவிலில், சுடுமண்ணால் செய்யப்பட்ட செல்லியம்மன், பெரியசாமி, சஞ்சீவி ஆஞ்சநேயர், நீலியம்மன், சப்த கன்னிகள் உள்பட ஏராளமான சிலைகள் இருந்தன. இந்நிலையில், கடந்த ஆண்டு கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், சுடுமண் சிற்பங்களை உடைத்துவிட்டனர்.
குறிப்பாக, பெரியசாமி மலையில் உள்ள 20 அடி உயரமுள்ள பெரியசாமி சிலை, செங்கமல சாமி சிலை, சூரப்பிள்ளையான் சிலை என பத்துக்கும் மேற்பட்ட சிலைகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். வேறு மதத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் புகுந்து சிலைகளை உடைத்ததாக இந்து மத அமைப்பினர் புகார் தெரிவித்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு நாதன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் இந்த சம்பவம் முடிவுரவில்லை.!
பா.ஜ.க ஆதரவாளரும், தனியார் யூட்யூப் சேனலை நடத்தி வருபவருமான கார்த்திக் கோபிநாத் என்பவர் திடீரென இந்த சிறுவாச்சூர் கோயிலை புனரமைக்க உள்ளதாக அறிவித்தார். சேதப்படுத்தப்பட்ட சிலைகள் அனைத்தையும் சீரமைக்க உள்ளதாகவும், அதற்கான நிதியை பொதுமக்கள் வழங்கலாம் என்றும் தனது தனியார் யூ டியூப் சேனலில் அறிவித்தார். இதற்காக செயலி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் நிதி வசூல் செய்துள்ளார். இந்த விவகாரத்தில், கார்த்திக் கோபிநாத் ஐம்பது லட்சத்துக்கும் மேல் மோசடி செய்ததாக சேலத்தைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதையடுத்து, இந்த விவகாரம் அரசியல் தளத்தில் சர்ச்சையானது.
மேலும் படிக்க | அண்ணாமலைக்கு அம்பேத்கர் புத்தகத்தை வழங்கிய விசிக மாணவர்!
இதுதொடர்பாக சர்ச்சைகளுக்குப் பதில் அளித்த இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தனி நபர்கள் யாரும் வசூல் செய்ய முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், சிறுவாச்சூர் கோயில் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.
இந்நிலையில், கார்த்திக் கோபிநாத் மீது சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் கொடுத்த மோசடிப் புகாரின் அடிப்படையில் ஆவடி மத்தியக் குற்றப்பரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதன் தொடர்ச்சியாக, நிதி வசூல் செய்து மோசடி செய்ததாகக் கூறி கார்த்திக் கோபிநாத்தை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கைது நடவடிக்கைக்கு பாஜக தலைவர்கள் கண்டனம்
இந்த கைது நடவடிக்கைக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘பொய்யான குற்றச்சாட்டுகளின்கீழ் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். தங்களுக்கு எதிரான குரல்களை தி.மு.க அரசு ஒடுக்க நினைக்கிறது. கார்த்திக் கோபிநாத்தின் தந்தையிடம் பேசினேன். இந்த விவகாரத்தில் பா.ஜ.கவின் சட்டக் குழுவினர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக இருப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல், மற்றொரு ட்விட்டர் பதிவில், தன்னுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்டதற்காக தென்சென்னை கூடுதல் கமிஷனர் கண்ணனை பணியிடை மாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருப்பதாகவும், அதேபோல் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதற்காக யூ டியூபர் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எந்தத் தவறும் செய்யாத இவர்களை விடுவித்துவிட்டு, தன்னுடன் நேரடியாக மோதலாம் என்று திமுகவுக்கு அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
அதேபோல், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ‘கார்த்திக் கோபிநாத் கைது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இந்துக்களோ இந்து கோவில்களோ பாதிக்கப்பட்டால் அதற்கு உதவிட யாரும் முன்வரக்கூடாது என பயமுறுத்தும் இந்து விரோத அரசின் வன்மத்தின் வெளிப்பாடு’ என விமர்சித்துள்ளார்.
மேலும் படிக்க | ரூ.15 லட்சத்தை பிரதமர் எப்போது தருவார்? - அண்ணாமலைக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியும் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், ‘கோவில் சீரமைப்புப் பணிக்காக பொதுமக்களிடம் பணம் வசூலித்ததன் காரணமாக VHS அமைப்பின் இளைஞரான கார்த்திக் கோபிநாத்தை சென்னைக்கு அருகில் உள்ள ஆவடி காவல்நிலைய போலீஸார் துன்புறுத்தியதாக வரும் செய்தி ஆச்சரியமளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். இது அரசியல் சாசனத்தின் 25வது பிரிவை மீறுவது என்று கண்டனம் தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி, இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்போவதாக கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத், தீவிர பா.ஜ.க ஆதரவாளராகவும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகையின் போதுகூட விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றவர்களில் ஒருவராக கார்த்திக் கோபிநாத் இருந்தார். மேலும் பல பாஜக பிரமுகர்களுடனும் கார்த்திக் கோபிநாத் தொடர்பில் இருப்பதாக கூறப்படுவதால் இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR