தமிழகத்திற்கு மத்திய அரசு உடனடியாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கோரிக்கை...
மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழகத்திற்கு உடனடியாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்.... பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கொரோனா தொற்று குறித்து கலந்தாய்வு நடத்தினார். நேரமின்மை காரணமாக, பிற மாநில முதல்வர்கள் அனைவரும் தங்களது கருத்துகளை பிரதமருக்கு பேக்ஸ் வாயிலாக அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அதன்படி, தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமருக்கு விடுத்துள்ள கோரிக்கைகளாவது; தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் விகிதம் 1.2 சதவீதம் என்ற குறைந்த அளவிலேயே உள்ளது. அதேபோல், கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் விகிதம் 54 சதவீதம் ஆக உள்ளது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கொரோனா சோதனைகள் நடத்த வேண்டும் என்பதால் கூடுதலாக PCR கருவிகளை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.
மேலும், விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கு போக்குவரத்து மானியம் வழங்க வேண்டும். டிசம்பர்-ஜனவரி மாதத்திற்கான GST நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும். தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக 1,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும். மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க அந்த தொகை பயன்படுத்தப்படும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்க தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய மத்திய அரசின் தொகுப்பு நிதியான ரூ.1,321 கோடியை விடுவிக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2020-21 ஆம் ஆண்டுக்கான 50% நிதியை விடுவிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ரொக்கமாக ஊதியம் வழங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பிரதமரிடம் கோரப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.