கடந்த 16 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய எம்.எல்.ஏவான நடிகர் கருணாஸ், அதிமுக அரசு மற்றும் போலீசார் பற்றி கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் இல்லையென்றால் இன்று எடப்பாடி பழனிச்சாமி அதிகாரத்தில் இருக்க முடியாது. சினிமா படத்தை பார்த்து விட்டு அதே மாதிரி போலீசார் நடந்துக்குறாங்க. தைரியம் இருந்தால், சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் என்னுடன் மோதத்தயாரா? எனவும், ஜாதிக்குறித்தும் பேசி சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்தார். இவர் பேசிய இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து, இதுக்குறித்து கருத்து தெரிவித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார், "சட்டத்தை மீறி யார் பேசியிருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். கருணாஸ் குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோவை அடிப்படையாக கொண்டு நுங்கம்பாக்கம் போலீசார் தாமாக முன்வந்து கருணாஸ் மீது கலவரத்தை தூண்டுதல், அதிகாரியை மிரட்டுவது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.