கடத்தப்பட்ட 3 மணிநேரத்தில் மீட்கப்பட்ட பள்ளி மாணவி; அசத்திய சென்னை போலீஸ்

மாணவியின் பெற்றோர் புகாரின் அடிப்படையில் போலீசார்  சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தும், மாணவியின் பெற்றோருக்கு அழைப்பு வந்த செல்போன் எண்ணை கண்காணித்தும் விசாரணை மேற்கொண்டனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 7, 2022, 01:08 PM IST
  • மாணவியின் பெற்றோர் உடனடியாக ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
  • வடபழனி 100 அடி சாலையில் உள்ள ஒரு நபரின் கடையில் 2 லட்சம் பணத்தையும் பெற்றோர் கொடுத்தனர்.
  • பள்ளி குழந்தைகளைக் கடத்தி பெற்றோரிடம் பணம் பறித்து கடன் அடைக்க திட்டம்.
கடத்தப்பட்ட 3 மணிநேரத்தில் மீட்கப்பட்ட பள்ளி மாணவி; அசத்திய சென்னை போலீஸ் title=

சென்னை வடபழனி பகுதியில் மருந்தகம் நடத்தி வருபவர் முகமது மீரான். இவரது 15 வயது மகள் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் பள்ளிக்கு சென்றுவிட்டு வெளியே வந்த மாணவியிடம் ஒரு பெண்மணி "நான் உனது தாயின் தோழி என்றும் அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்றும் அதற்காகத் தான் உன்னை அழைக்க நான் வந்துள்ளேன்" என்றவாறு இனிக்க இனிக்க பேசி, மாணவியிடம் இருந்து அவரது தாய் தந்தையரின் தொடர்பு எண்ணை பெற்றுள்ளார்.

இதனை நம்பிய மாணவியும் அவருடன் ஆட்டோவில் சென்ற நிலையில், ஆட்டோவிலேயே நகரின் பல்வேறு இடங்களிலும் மாணவியை வைத்துக்கொண்டு பெண்மணி சுற்றித் திரிந்தார். அதற்கிடையே மாணவியின் தந்தை முகமது மீரான் மற்றும் அவரது மனைவியைத் தொடர்புகொண்டு உங்கள் மகள் உயிருடன் வேண்டுமென்றால் 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனக்கூறி மிரட்டியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் அடிப்படையில் போலீசார் ஆட்கடத்தல் வழக்குபதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தும், மாணவியின் பெற்றோருக்கு அழைப்பு வந்த செல்போன் எண்ணை கண்காணித்தும் விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் படிக்க | மதுபோதையில் தாயிடம் தகராறு - அண்ணனை தீர்த்துக்கட்டிய தம்பிகள்!

மேலும், அழைப்பு வந்தால் பேரம் பேசி 2 லட்சம் மட்டுமே கொடுக்க முடியும் என கூறுமாறு மாணவியின் பெற்றோருக்கு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி கடத்தல் பெண்மணி அழைத்தபோது மாணவியின் பெற்றோரும் 10 லட்சத்தில் இருந்து தொகையை சிறிது சிறிதாக குறைத்து 2 லட்சம் ரூபாய் கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர். பின்னர் பெண்மணியின் கூறியபடி வடபழனி 100 அடி சாலையில் உள்ள ஒரு நபரின் கடையில் 2 லட்சம் பணத்தையும் பெற்றோர் கொடுத்தனர். 

இதற்கிடையில் போலீசாரின் விசாரணையில் மாணவியின் பெற்றோரை தொடர்புகொண்ட கடத்தல் பெண்மணியின் செல்போன் எண் வடபழனி 100 அடி சாலையில் சுற்றித் திரிவது தெரியவந்தது. அதனடிப்படையில் அப்பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொண்ட போலீசார் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே ஆட்டோவில்  மறைந்திருந்த கடத்தல் பெண்மணியை கைது செய்து அவரிடம் இருந்து 15 வயது மாணவியை மீட்டனர்.

பின்னர் மாணவியின் பெற்றோரிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் பணம் வாங்கி வைத்த நபரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாணவியை கடத்திய பெண்மணி ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மொஹசினா பர்ஹீன் (33) என்பதும் பணம் பெற்ற நபர் அப்பெண்ணின் சகோதரர் வேலைபார்க்கும் கடையின் உரிமையாளரான கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இஜாஸ் அகமது (52) என்பதும் தெரியவந்தது.

மேலும் படிக்க | குடி குடியை கெடுக்கும்; மது பழக்கம் உயிரை குடிக்கும்

மேலும், அப்பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில்  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ராயப்பேட்டை பகுதியில் மழலையர் பள்ளி தொடங்க தெரிந்தவர்களிடமும் வங்கியிலும் லோன் போட்டு சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை பெற்று பள்ளியை துவங்க இருந்ததும், அப்போது கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டதால் நினைத்தபடி மழலையர் பள்ளி துவங்க முடியாமல் போனதும் தெரியவந்தது. 

மேலும், அதனால் ஏற்பட்ட கடன் தொல்லை காரணமாக தொடர்ந்து மொஹசினா பர்ஹீன் மன உளைச்சலில் இருந்து வந்ததும் பின்னர் பள்ளி குழந்தைகளைக் கடத்தி பெற்றோரிடம் பணம் பறித்து கடன் அடைக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. அதனடிப்படையிலேயே பத்தாம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்த முயன்று சிக்கியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

அதனைத் தொடர்ந்து கடத்தப்பட்ட பள்ளி மாணவியையும், கடத்தல் நபரால் பெறப்பட்ட 2 லட்சம் பணத்தையும் போலீசார் பத்திரமாக மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். பத்தாம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டதாக புகார் அளித்த 3 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு ஆயிரம் விளக்கு காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் குற்றவாளிகளை கைது செய்து மாணவியை மீட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | போதையில் போலீசையே கல்லால் அடித்த பெண் -வீடியோ!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News