நவம்பர் 15ம் தேதி முற்பகலில், கஜா புயல் கரையை கடக்க இருப்பதால் 14ம் தேதி இரவு முதலே பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து கஜா புயலாக மாறியுள்ளது. இந்த கஜா புயல் கடலூருக்கும், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக அனைத்து கடலோர மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சென்னைக்கு தென்கிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 880 கிலோ மீட்டர் தொலைவிலும் இப்புயல் மையம் கொண்டுள்ளது. வரும் 24 மணி நேரத்தில் வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும் கஜா பின்னர் வலுக்குறைந்த நிலையில் சென்னை - நாகை இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நவம்பர் 15ம் தேதி முற்பகலில், கஜா புயல் கரையை கடக்க இருப்பதால், 14ம் தேதி இரவு முதலே பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால், இன்று முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடல் மீனவர்கள் இன்றுக்குள் கரை திரும்ப வேண்டும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.