திண்டுக்கல் மாவட்டம் (Dindigul) பழனியில் ஒரு கற்காலக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை ஆராய்ந்ததில் தமிழ் எழுத்துப் பொறிப்புகள் இருந்ததும் கண்டறியப்பட்டது. இக்கருவி சுமார் 7000 வருடங்கள் பழமையானது குறிப்பிடத்தக்கது. இக்கருவியை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ( P. Narayanamurthy) கண்டுபிடித்துள்ளார்.
இந்த கற்காலக் கருவியைக் குறித்து தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது:
பழனி (Palani) சண்முகநதி ஆற்றங்கரையில் ஒரு தொல்லியல் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் ஆற்றங்கரையின் மேற்கு ஓரத்தில் இந்த கற்காலக் கருவி உடைந்த நிலையில் கிடைத்தது. இந்தக் கருவியை மேற்கொண்டு ஆராய்ந்ததில் தமிழ் எழுத்துப் பொறிப்புகள் இருந்ததும் கண்டறியப்பட்டது. பொதுவாக மனித இனத்தின் தொன்மை வரலாற்றையை பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம், உலோக கற்காலம் என்றவாறு வகைப்படுத்துவார்கள். நமக்கு கிடைத்த இந்த கருவி புதிய கற்காலத்தைச் சேர்ந்தது.
தொல்லியலில் புதிய கற்காலம் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. தமிழகத்தில் புதிய கற்காலம் என்பது பிளிஸ்டோசின் (pleistocene) காலத்தின் இறுதியாக அதாவது கி.மு 11700 ஆக உள்ளது. இங்கிருந்து தான் தமிழின் முதல் சங்கம் தொடங்குகிறது. இவ்வகையான புதிய கற்கால கருவிகள் மனிதனின் விலங்கு வேட்டையில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்ற சில சமூக பழக்க வழக்கங்களிலும் இக்கருவி பயன்பாட்டில் இருந்துள்ளது. நமக்கு கிடைத்த இக்கருவி மிகவும் உடைந்த நிலையில் உள்ளது. கற்கருவியின் முனைப் பகுதியும், பின் பகுதியும் உடைந்துள்ளது. பயன்படுத்தும் போது இது உடைந்து போன மையால் இதன் உடைமையாளன் இக்கருவியை கைவிட்டு இருக்கவேண்டும்.
ALSO READ | தொல்லியல் துறை படிப்புக்கு தகுதி அளவுகோலானது தமிழ் மொழி
இக்கருவியின்சிறப்பு:
இக்கருவியில் உள்ள சிறப்பு என்னவென்றால் இக்கருவியில் பழந்தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருப்பதுதான். இக்கருவியின் தற்போதைய எடை 80 கிராம். இக்கருவியின் பளபளப்பான மேல்புறத்தில் மொத்தம் 8 எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. இவை தமிழ் எழுத்துக்கள். இவை தொல் தமிழி எழுத்து வடிவத்தை சார்ந்தவை.
இதில் 5 எழுத்துக்கள் உயிர் மெய்யாகவும், 3 எழுத்துக்கள் குறில் , நெடில் வடிவங்களாகவும் உள்ளன. இவை இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளன. இந்த எழுத்துப் பொறிப்பை "தென்னாடந்" என வாசிக்க முடிகிறது. அதாவது இக்கருவியின் உடைமையாளனின் பெயரை தென்னாடன் என கொள்ளலாம். இவ்வாறு ஆட்களை பகுதிகளின் பெயர்களாக அழைப்பது தமிழர்களின் வழக்கமே.
இந்த எழுத்துக்கள் தமிழியின் முன்னோடியாக உள்ளன:
மேற்கத்தியான், வடக்கத்தியான், கீழ்நாடான், மேல்நாடான் என் அழைப்பது மரபு. அதை ஒட்டி இக்கருவியின் உடைமையாளரின் பெயர் தென்நாடன் என்பது புலனாகிறது. இவன் தெற்குப் பகுதியை சேர்ந்தவனாக இருக்கக்கூடும். இக்கருவியின் எழுத்துப் பொறிப்பு இடமிருந்து வலமாகப் போகிறது. எழுத்துக்கள் சராசரியாக 1 செ.மீ உயரமும் 0.5 மில்லி மீட்டர் ஆழமும் கொண்டவையாக உள்ளன. இந்த எழுத்துக்கள் சங்ககால தமிழ் எழுத்துக்களான தமிழியின் முன்னோடியாக உள்ளன.
ஆனால் குறில், நெடில் குறிகள் தமிழியைப் போல் எழுத்துக்களுடன் ஒட்டியிரமால் தனித்தனி எழுத்துக்களாகவே எழுதப்பட்டுள்ளன. எழுத்துக்கள் கூர்மையான வடிவம் கொண்ட ஏதோ ஒரு உலகத்தால் குறிப்பாக தாமிரத்தால் வடிக்கப்பட்டிருக்க வேண்டும். எழுத்துக்களின் தொடக்கம் தெளிவாக உள்ளது. ஆனால் போகப்போக உலோகத்தின் கூர்மை மங்கிப் போனதால் எழுத்துக்கள் சிதைவுற்று காணப்படுகின்றன. இக்கருவியின் காலத்தை சுமார் 7000 ஆண்டுகள் என கணிக்கலாம். அதாவது கி.மு 5000 இரும்பு பயன்பாட்டிற்கு வராத காலம் மற்றும் தாமிர காலம் அடிப்படையிலும் தொல் தமிழி எழுத்துக்கள் என்ற அடிப்படையிலும் இவ்வாறு கணிக்கலாம்.
இறையனார் அகப்பொருள் உரை எனும் கி.பி 7 ஆம் நூற்றாண்டு இலக்கியத்தின் அடிப்படையில் இடைச்சங்க காலமானது கி.மு 6900 க்கும் கி.மு 3200 க்கும் இடைப்பட்ட காலம். எனவே இக்கருவியின் காலத்தை மேற்கண்ட காரணிகளால் இடைச்சங்க காலத்தை சேர்ந்தது. அதாவது 7000 ஆண்டுகளுக்கு முன் (கி.மு 5000 அளவில் என கணிக்கலாம்) இக்கற்கால கருவி கிடைத்திருப்பதன் மூலம் தமிழ்மொழி மற்றும் தமிழ் எழுத்துக்களின் உலகளாவிய தொண்மை உறுதிப்படுத்திகிறது. நமக்கு கிடைத்த இந்த கற்காலகருவி எந்தவகை பாறை பிரிவைச் சேர்ந்தது என அறிய நிலவியலாளர் மணிகண்டனை தொடர்புகொண்டோம்.
ALSO READ | தமிழ் மொழியால் இந்தியாவிற்கே பெருமை - பிரதமர் மோடி!
நிலவியலாளர் மணிகண்டனை கூறிய கருத்துக்கள்:
இக்கருவி இரும்புத்தாதும் குவார்ட்சும் கலந்த பாண்டட் மேக்சைட் குவார்ட்ஸ் (BMQ - Banded Magnisite quartz ) எனும் பாறை வகையைச் சேர்ந்தது. இரும்பும், குவார்ட்சும் கலந்த பாறை வகையாக இருப்பதால் இது மிகவும் கடினத்தன்மை வாய்ந்தது. சற்றே செம்மை நிறத்தில் உள்ள இந்த பாறை வகை ஆர்க்கியன் - புரோடிரோசோயிக் (Archean proteroziac) காலத்தில் அதாவது 250 கோடி வருடங்களுக்கு முன்பு உருவானவை.
தமிழ்நட்டின் நிலப்பரப்பில் பெரும்பான்மையான பகுதிகளில் இந்த வகை கற்களும், பாறைகளும் காணப்படுகின்றன. (mineral Province Map of India for reference is enclosed) இவ்வகைப் பாறைகள் உள்ள இடத்தில் பழந்தமிழர்கள் கிணறு தோண்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்தப் பாறைகள் உள்ள இடத்தில் கிணறு தோண்டினால் நிச்சயம் தண்ணீர் இருப்பதுடன் அது வற்றாத கிணறாகவும் இருக்கும். இவ்வாறு இவ்வகை பாறை பகுதிகளை தேர்ந்தெடுத்து கிணறு தோண்டுவது இன்றளவும் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது எனக் கூறினார்.
ALSO READ | தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்க டெல்லியில் தமிழ் அகாடமி: மனீஷ் சிசோடியா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR
(கட்டுரையாளர் : ப.வ.தமிழரசன்)