கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வழங்க பிரதமரிடம் கோரிகை....
நேற்று மாலை டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு இல்லத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து இன்று காலை டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்டு காலை 9.45 மணியளவில் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
உடமைகளுக்கும், வேளாண்மைக்கும், மின்சாரம், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளும் ஏற்பட்டுள்ள சேதங்களையும், தமிழக அரசு மேற்கொண்டு வரும் மீட்பு, சீரமைப்பு, நிவாரணப் பணிகள் குறித்தும் முதலமைச்சர், பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார். நிவாரண நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அதில் 1500 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் புயல் சேதங்களை மதிப்பிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவை விரைந்து தமிழகம் அனுப்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, பிரதமர் மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் கூறுகையில், "கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. அதற்கு தேவையான நிதியை பெறுவதற்காக பிரதமரை இன்று சந்தித்தேன். அப்போது பாதிப்புகள் குறித்து விளக்கம் தெரிவித்து சேதம் குறித்து அறிக்கையாக சமர்பித்தேன்.
இடைக்கால தேச நிவாரணமாக ரூ.1100 கோடி கோரினேன். நிரந்தர நிவாரணமாக ரூ.15 ஆயிரம் கோடி கோரினேன். முதல்கட்டமாக மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரினோம். விரைவில் குழுவை அனுப்புவதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.
கஜா புயல் அறிவிப்பு வந்த உடனேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டது. இதனால் பொதுமக்களின் பாதிப்பு பல மடங்கு குறைக்கப்பட்டன. அமைச்சர்கள் அங்கேயே தங்கி நிவாரண பணிகள் செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது. இரண்டு முறை என் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. மத்திய அரசின் பணிகள் குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். எதிர்கட்சிகள் தேவையில்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்" என்றார்.