வெப்ப சலனம் மற்றும் தொடர் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி (Kanyakumari) மாவட்டத்தில் அதிகமாகவே பெய்து வரும் மழையின் அளவால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளதோடு பல வீடுகளில் மழை நீரும் புகுந்தது.
கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பல ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ளை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கை இன்னும் தொடர்கிறது. கன்னியாகுமரியின் பல ஊர்களில் மழை நீர் புகுந்து மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. உதாரணமாக, ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பன்றிக்கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதில், வெள்ள (Flood) நீர் கிராமங்களுக்குள் புகுந்தது. இதன் காரணமாக பல கிராமங்களில் மக்கள் கயிறு கட்டி பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், முக்கடல் அணை ஒரே நாளில் பத்து அடி உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவான 25 அடியை நீரின் அளவு எட்டியுள்ளது.
மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதுகாப்பு கருதி பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளதால், மக்களுடைய இயல்பு வாழ்க்கை கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள திக்குறிச்சி, குழித்துறை, மங்காடு, பரக்காணி, முஞ்சிறை, பார்திவபுரம், வைக்கலூர் போன்ற தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ALSO READ: Cyclone Yaas: ஒடிசாவில் யாஸ் புயல் ஏற்படுத்தும் பாதிப்பு வீடியோ
கீரிப்பாரையில் அடித்த கனமழையால் அங்குள்ள தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. கீரிப்பாரை தடிக்காரகோணம் ஊராட்சிக்குள் வருகிறது. தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், பலர் பயன்படுத்தும் ரப்பர் தொழிற்சாலைக்குச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது.
கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் (Rain), தாமிரபரணி, கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிக அளவிலான மழை பெய்து வருவதால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாரு அணைகளில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பெய்யும் தொடர் மழையால், முக்கியமாக அங்குள்ள வாழைத்தோட்டங்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் கனமழையால், அந்த மாவட்டமே ஒரு குட்டித்தீவாக காட்சியளிக்கிறது. மாவட்டம் முழுவதும் வீதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. நிவாரணப் பணிகள் முழு வீச்சுடன் நடந்துவருகின்றன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பள்ளிகள் மற்றும் பாதுகாப்பான கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். பல இடங்களில் பாதுகாப்பு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ALSO READ:தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR