கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான கொடியேரி பாலகிருஷ்ணன் (69) கேன்சர் நோயால் நீண்ட நாளாக பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், தொடர்ந்து மருத்துவ சிகிச்சையையும் பெற்று வந்தார். கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பொறுப்பில் இருந்து விலகினார். தொடர்ந்து, உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை பெற கடந்த ஆக.28ஆம் தேதி அன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதை தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் நேற்றிரவு (அக்.1) 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதுகுறித்து அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,கொடியேரி பாலகிருஷ்ணன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், படிப்படியாக அவரின் உடல் உறுப்புகள் செயலிழந்ததை தொடர்ந்து அவர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
முதல்வர் அஞ்சலி
மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொடியேரி பாலகிருஷ்ணனின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்றிரவு அஞ்சலி செலுத்தினார். அவருடன் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன், தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷணன், அக்கட்சியைச் சேர்ந்த ஆனி ராஜா, மலையாள திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷன் ஆகியோரும் மறைந்த கொடியேரி பாலகிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, எம்ப்ரியோ செய்ய பாலகிருஷ்ணன் உடல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு நேற்றிரவு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் விமானம் மூலம் இன்று காலை கேரளா கொண்டுசெல்லப்படுகிறது.
அவரின் மறைவு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமான சிபிஐஎம் தலைமைக் குழு உறுப்பினரும், கேரள மாநில முன்னாள் அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன். கொள்கை உறுதிமிக்க தலைவராக விளங்கிய தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன், 1975ஆம் ஆண்டு நெருக்கடிநிலையின் போது மிசா சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை அனுபவித்தவர். அவரை பிரிந்து வாடும் சிபிஐம் கட்சிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
Paid my last respects to @cpimspeak Polit Bureau Member and 3 time Kerala State Secy Thiru. Kodiyeri Balakrishnan.
Com. Kodiyeri was an unyielding personality and was even jailed under MISA during the Emergency in 1975.
My heartfelt condolences to his family & CPI(M) comrades. pic.twitter.com/zFn2ZJ6ulJ
— M.K.Stalin (@mkstalin) October 1, 2022
கொடியேரி பாலகிருஷ்ணனின் மறைவு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில்,"எனது அன்புத் தோழரும், நண்பருமான கொடியேரி பாலகிருஷ்ணனின் மறைவு என்னை நிலைகுலையச் செய்கிறது. கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டியெழுப்பவும், ஒடுக்கப்பட்டோரை உயர்த்தவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த துணிச்சலான தலைவர். நமது போராட்டங்களில் அவர் தொடர்ந்து நம்மை ஊக்குவிப்பார். சிவப்பு வணக்கம், தோழர்" என பதிவிட்டுள்ளார்.
The demise of my dear comrade and friend Kodiyeri Balakrishnan leaves me devastated. He was an astute leader who dedicated his entire life to build the communist movement and uplift the downtrodden. He will continue to inspire us in our struggles. Red Salute, Comrade. pic.twitter.com/P5goim0gXJ
— Pinarayi Vijayan (@pinarayivijayan) October 1, 2022
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரா உறுப்பினரான கொடியேரி பாலகிருஷ்ணன், 2006-2011 காலகட்டத்தில், அச்சுதானந்தனின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். மேலும், 2015ஆம் ஆண்டில் இருந்து கட்சியின் கேரள மாநில செயலாளராக இருந்த அவர், கடந்த மாதம் ராஜினாமா செய்தார். அவர் 'தேஷாபிமானி' என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலையாள நாளிதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். அவரின் மறைவை அடுத்து கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.