கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் நினைவாக ஹைக்கூ கவிதை போட்டி இந்த ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. முதல் பரிசு 25000, இரண்டாவது பரிசு 15000 , மூன்றாவது பரிசு 10000, மேலும் ஐம்பது கவிதைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த ஐம்பத்தி மூன்று கவிதைகளும் தொகுக்கப்பட்டு ஆண்டுதோறும் நூலாக வெளியிடப்படும், இந்த ஆண்டு வாடியது கொக்கு என்ற தலைப்பில் நூல் வெளியாகிறது. முதல் பரிசு பெற்ற கவிதைகள் ஒரு வரியில் ஒவ்வொரு ஆண்டும் நூலின் தலைப்பாக வைக்கப்படும். நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி பரிசுகள் வழங்கி நூலை வெளியிடுகிறார். எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். கவிக்கோ மறைந்த கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த போட்டிக்கு விதை தூவினார் இயக்குனர் என். லிங்குசாமி. இந்த ஆண்டு அது முளைத்து பயிராகி இருக்கிறது. இயக்குனர் லிங்குசாமிவிஷ்ணு அசோசியேட்ஸ் ஆர். சிவகுமார் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு ஆதாரமாக இருக்கிறார்கள். பரிசுக்குரிய கவிதைகளை இயக்குனர் என். லிங்குசாமி தேர்வு செய்தார்.
இயக்குனர் லிங்குசாமி பேசும்போது, நானும் பிருந்தா சாரதியும் அப்துல் ரகுமான் ஐயாவை பனையூரில் பார்ப்பதற்காக செல்வோம். இதற்கு முன்னதாக அவர் இரண்டு முறை என் கவிதை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்துள்ளார். நாங்களும் மூன்று முறை அவரின் வீட்டிற்கு சென்றுள்ளோம். நான் ஊரில் இருக்கும் காலத்தில் ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் அவரின் கவிதைகளை படித்துள்ளேன். அவரின் கவிதை தான் நானும் கவிதை எழுத வேண்டுமென ஊக்குவித்தது. ஆனால், அவரை பார்க்க சென்றபோதெல்லாம் அவர் ஒரு கவிஞர் என்பதை தாண்டி குருவாகவே திகழ்வார். யாரை பற்றியும் ஒரு தப்பான கண்ணோட்டம் அவரிடம் இருக்கவே இருக்காது. நாங்கள் மூன்று மணி நேரம் அவரிடம் பேசும்போது அவ்வளவு விஷயங்களை பகிர்ந்து கொள்வார். அங்கிருந்து கிளம்பவே மனசு வராத அளவுக்கு அவரின் பேச்சும் கவிதையும் இருக்கும். அவருடன் பேசிய பதிவுகள் எங்களிடம் உள்ளன. தக்க சமயம் வரும் வேளையில் அதை வெளியிடுவோம்.
என்னை மட்டுமல்ல, என்னை விட பல திறமையான கவிஞர்களை அவர் உருவாக்கியுள்ளார். இன்று அவரின் பெயரில் ஒரு விருது வழங்கும் விழா நடைபெறுவது மகிழ்வாக உள்ளது. நான் முன்னதாகவே அவரிடம் நான் உங்களின் பெயரில் ஒரு ஹைக்கூ போட்டி நடத்துவேன் என்று கூறினேன். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். ஆனால், அதை நடத்துவதற்கு ஐந்து ஆண்டு காலங்கள் ஆகிவிட்டன. இந்த விழாவில் அறிவுமதி அண்ணன் அவர்கள் இல்லை என்பது சிறிது வருத்தமாக உள்ளது. அவர் மட்டும் இங்கிருந்திருந்தால் நான் முழு நிறைவுடன் இருந்திருப்பேன். கனிமொழி அவர்களை அழைப்பதற்காக அவரிடம் பேசினேன். அவரை நான் இதற்கு முன்பாக பல இடங்களில் சந்தித்துள்ளேன். அவரின் எளிமை தான் அவருடைய மிக சிறந்த தகுதியாக பார்க்கிறேன். கனிமொழி அவர்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரிடம் மட்டும் பதட்டம் எப்போதுமே இருக்காது. எப்போதும் அவர் அவராகவே இருப்பார்கள் அதுவே அவரின் தகுதி.
கனிமொழியை சந்திக்க அவரின் வீட்டிற்கு சென்றபோது கலைஞரின் புகைப்படம் ஒரு பக்கம், அவரின் மகன் ஒருபக்கம் அமர்திருந்தனர். அது ஒரு நீண்ட உரையாடல் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்திற்கும் மேலான ஒரு உரையாடல் அது. அவரின் மகனும் மிக சிறந்த அறிவாளி. தமிழ் இலக்கியத்தை பற்றி பேசுகிறார். இன்றைய சினிமாவை பற்றி பேசுகிறார். அந்தளவிற்கு ஒரு தெளிவான சிந்தனையுடன் உள்ளார். கனிமொழி அவர்களும் விழாவின் மறுநாள் கலைஞரின் பிறந்தநாள் அதனால், ஏதேனும் வேலை வந்துவிடுமோ என சிறிது குழப்பம் உள்ளது. ஆனாலும், கலைஞர் அவர்களும் அப்துல் ரகுமான் அவர்களுக்குமான உறவை பற்றி நான் நன்கறிவேன். அதற்காகவாவது நான் வரவேண்டுமென ஆசைப்படுகிறேன் என்றார். இங்கு வருகை தந்ததற்கு அவருக்கு நன்றி.
மேலும் படிக்க | கருணாநிதிக்கு "பாரத ரத்னா" விருது : வைரமுத்துவின் வாழ்த்துக் கவிதை.!
எஸ்.ராமகிருஷ்ணன் சார் அவர்கள் அற்புதமான ஒரு உரையை வழங்கினார். அவர் சொன்ன கவிதையும் மிக அற்புதமாக இருந்தது. என் கதை விவாதத்தில் சண்டைக்கோழி முதல் பாகம் முதல் இதுவரை என்னுடன் ஒரு நல்ல நண்பராக பயணித்து வருகிறார். தொடர்ந்து இந்த பயணம் சென்று கொண்டே இருக்கும். ஒவ்வொரு முறையும் நாங்கள் சந்திக்கும் பொழுது அவர் கற்ற விஷயங்களை பகிர்ந்து கொள்வார். அத்தனை புத்தகங்களை படித்தவர் அவர். அனைத்து விஷயங்களை பற்றியும் தெரிந்த ஒரு மனிதர். இன்றைய காலத்தில் தான் நாம் இணையதளத்தை பயன்படுத்துகிறோம். அந்த காலத்தில் இவரிடம் கேட்டாலே போதும் அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பார். அவருக்கும் நன்றி.
எனக்கு இன்றும் கூட மனதில் தவிர்க்க முடியாத ஒரு சந்தேகமாக இருப்பது, நான் ஒரு இயக்குனராக இருப்பதால் தான் என் கவிதைகளையும் பாராட்டுகிறார்களோ என்ற கேள்வி எப்போதும் உண்டு. அது எப்போது நீங்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனந்த விகடன் இதழ் வந்த காலத்தில் போஸ்ட் கார்ட் மூலம் கவிதை எழுதி அனுப்பியுள்ளேன். 1991ஆம் வருடத்தில் அப்போது என் கவிதைகளை அங்கீகரித்து இதழில் அச்சடித்து வந்த போது தான் எனக்குள்ளும் ஏதோ ஒரு திறமை உள்ளது என்ற நம்பிக்கையோடு சென்னை கிளம்பி வந்தேன். இன்று அப்துல் ரகுமானின் பெயரில் ஹைக்கூ போட்டி நடத்துவதற்கும் அது தான் காரணம்.
நாங்கள் தேர்ந்தெடுத்த இந்த 53 கவிதைகளையும் வரிசைப்படுத்துவதற்குள் நாங்கள் பட்ட கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும். தற்போதைக்கு நாங்கள் 1,2,3 என வரிசைப்படுத்தியுள்ளோமே தவிர இந்த 53 கவிதைகளுமே ஒன்று தான். தேர்ந்தெடுக்கப்படாத கவிதைகள் அனைத்தும் நன்றாக முயற்சி செய்யப்பட்ட கவிதை தான். என்னுடைய படங்களுக்கு நான் எப்படியோ தெரியாது. ஆனால், இந்த கவிதை போட்டியில் நான் நூறு இருக்க வேண்டுமென உறுதியாக இருந்தேன். அதை எனக்கு கற்றுத் தந்தது ஐயா அப்துல் ரகுமான் தான். அவரின் பெயரில் நடத்துவதால் அவரை போன்று நேர்மையாக இருக்க வேண்டுமெனவும் விரும்பினோம். நாங்கள் யாருடைய பெயரையும் பார்க்காமல் தான் தேர்ந்தெடுத்தோம். அந்த அளவிற்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். சமீபத்தில் என் நண்பர் பாபு கூட எனக்கு தொலைபேசி மூலம் அழைத்து என் கவிதையை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்தார். ஆனால், எனக்கு எந்த கவிதை என்று தெரியவில்லை. பிறகு அவரிடம் கேட்டபோது தான் அவரின் கவிதையை கூறினார். அவரின் கவிதை இதில் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். ஆனால், எந்த கவிதை என்று தெரியாது.
மிக அற்புதமான கவிதைகள் எல்லாம் இதில் உள்ளது. நாங்கள் ஆலோசிக்கும் பொழுது கூட நாம் என் இதை தேர்ந்தெடுக்கவில்லை. அந்த கவிதை கூட நன்றாக உள்ளதே. எதை தேர்ந்தெடுக்கலாம் என்ற பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்தன. முதல் பரிசுக்காக ஒரு பத்து கவிதை உள்ளது. இரண்டாம் பரிசுக்கு பத்து கவிதை உள்ளது. எதை தேர்ந்தெடுப்பது என்று எங்களுக்குள்ளே மூச்சு திணறும் அளவிற்கு பெரிய போராட்டம் இருந்தது. முருகேசன் அவர்களின் கவிதையை இங்கு கனிமொழி கூட சொன்னார்கள். அதேபோன்று ஒரு கவிதை " வறுமையின் காரணமாக படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டார்கள் எதிர் வீட்டு சரஸ்வதியும் லட்சுமியும்" இது போன்ற கவிதைகளை எப்படி வரிசை படுத்துவது? " அந்த மயானத்திற்கு உயிர் தந்தது ஒரு பிணம் " இதை எழுதியவரின் பெயர் எனக்கு தெரியவில்லை. ஆனால், அந்த கவிதையையும் இதில் உள்ளது.
இதில் உள்ள அனைத்து கவிதைகளும் முதல் இடத்தில சேர வேண்டிய கவிதை தான். நாங்கள் ஒன்று, இரண்டு, மூன்று, என வரிசைப்படுத்தியதனால் மற்ற கவிதைகளை குறைத்து எடைபோட வேண்டாம். என்னுடைய ரன் படத்திற்கு வசனம் எழுதிய மோனா பழனிசாமியின் கவிதை ஒன்று இதில் உள்ளது. "உதிர்ந்த பூ ஊர்வலம் போகிறது வடம்பில் இருக்கும் எறும்புகளுடன்". எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று "காக்கை கூட்டில் காத்திருக்கும் இசை குயிலின் முட்டை" இது போன்ற நிறைய கவிதைகள் உள்ளது.
நான் எனது பட ஷூட்டிங்கில் இருந்த போது தான் இந்த அணைத்து வேலையும் செய்து முடித்தேன். என்னுடன் பிருந்தா சாரதி அவர்கள் கூட இருந்து நாங்கள் இது அனைத்தையும் தேர்வு செய்து எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களுக்கு முதல் மூன்று கவிதைகளை அனுப்பினோம். அப்போது, மலேசியாவை சேர்ந்த நடா என்பவருக்கு வாழ்த்து தெரிவித்த போது அவரின் வீட்டில் யாரும் நம்பவில்லை. நான் ஸ்பீக்கரில் போடுகிறேன் ஒரு வார்த்தை பேசுங்கள் என்றார். ஒரு வரியில் எழுதிவிட்டு கவிதை என்று சொல்கிறீர்களே என்றார்களாம். அதேபோல் தான் நான் ஊரில் இருந்த போது கூட என் அண்ணனிடம் விகடனிலிருந்து பரிசு வந்துவிட்டது என் கவிதைக்கு என்று கூறுவேன். " இஸ்திரி போடும் தொழிலாளியின் வயிற்றில் சுருக்கம் " என்ற கவிதைக்கு 30 ரூபாய் பரிசாக வந்தது. மூன்று வரி தானே இது என்ன பெரிய விஷயம் என்பார்கள்.
மேலும் படிக்க | சமரசமில்லாத சமூகநீதிப் போராளி கலைஞர் கருணாநிதிக்கு இன்று பிறந்தநாள்
ஒரு வரி, ஒரு வார்த்தை, ஒரு சொல் எல்லாம் ஒரு கண்டுபிடிப்பு போன்றது. அது ஒரு பேர் அற்புதம். அப்படிபட்ட அற்புதத்தை செய்து இங்கு கலந்து கொண்ட அனைவர்க்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும். விவேகா, மிகவும் பிசியாக இருக்கும் ஓரு பாடலாசிரியர். எனக்காகவும் தி வாரியார் படத்தில் புல்லட் என்னும் பாடலை எழுதியுள்ளார். பாடலும் மிக பெரிய ஹிட். இதற்கு முன்னதாக அவர் சாமி படத்தில் எழுதிய பாடலும் ஹிட். அவரின் நேரத்தை ஒதுக்கி இங்கு வந்ததற்கு அவருக்கும் மிக்க நன்றி. என் கவிதையை சுமந்து செல்வதில் கே பாஸ்கரன் மற்றும் ஞான சம்பந்தம் ஐயா அவர்களுக்கும் பெரும் பங்குள்ளது. நெல்லை ஜெயந்தா அவர்களுக்கு இதுவரை என் படத்தில் பாட்டெழுதும் சூழல் வரவில்லை. அதற்கு சரியான சூழலில், சந்தர்ப்பத்தில் பாட்டு எழுதி அதுவும் மிகப் பெரிய வெற்றியடைய வேண்டும் என விரும்புகிறேன். மஹதி என் படத்தில் "முதல் மழை" என்ற அற்புதமான பாடலை எழுதியவர், நான் அழைத்தவுடன் இங்கு வருகை தந்ததற்கு நன்றி. நேற்று நான் திருச்சியில் இருந்து வந்தபோது, என்னுடன் பயணித்த பர்வீன் அவர்களுடன் இலக்கியங்களை பேசிக்கொண்டு கவிதைகளை பற்றி பேசிக் கொண்டு வந்தது மகிழ்ச்சி. இளம்பரை, முஸ்தபா மற்றும் ஐயா அப்துல் ரகுமான் அவர்களின் வீட்டிலிருந்து அனைவருக்கும் வருகை தந்ததற்கு நன்றி. இது ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக முஸ்தபா போன்ற நிறைய நண்பர்கள் ஒத்துழைத்தார்கள் அவர்களுக்கும் நன்றி, என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர், கவிஞர் கனிமொழி பேசும்போது, கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக நடத்தக்கூடிய இந்த கவிதை போட்டி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர், கவிஞர் லிங்குசாமி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அழகான உரையை இம்மேடையில் கேட்பதற்கு வாய்ப்பளித்த மரியாதைக்குரிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் மற்றும் அழகாக முன்னுரை வழங்கிய பிருந்தா சாரதி அவர்களுக்கும் நன்றி. எட்டாயிரம் கவிதை படித்துள்ளேன் என்று தைரியமாக கூறி இங்கு இவரால் எப்படி நிற்க முடிகிறது என்று எனக்கு தெரியவில்லை. அதிலும், எட்டாயிரத்தில் சிறந்த கவிதையை தேர்தெடுத்திருக்க கூடிய ஜெய பாஸ்கர் மற்றும் எல்லா பெண்களுக்கும் பிடித்த பெயர் கவிஞர் விவேகா இவ்விருவருக்கும் நன்றி.
வாழ்த்துரை வழங்கவிருக்க கூடிய கிராம குருநாதன், சிவகுமார் அவர்களே, நன்றியுரை வழங்கவிருக்கும் வேடியப்பன் அவர்களே, இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக்கூடிய நெல்லை ஜெயந்தா அவர்களே, இந்நிகழ்ச்சியில் கலந்திருக்கும் கவிஞர் அனைவர்க்கும், திரை உலகை சேர்த்த அனைவர்க்கும் நன்றி. பல ஆண்டுக்கு பின் இந்த அரங்கத்தில் பேசக்கூடிய ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளனர். வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்கள் ஒரு க்ஷணத்தில் கவிதையாக மாறிவிடும் என்பதை நான் இங்கு புரிந்து கொண்டேன். என்னுடைய படத்தையே யாரேனும் எனக்கு வழங்கினால் அது தான் எனக்கு மிகவும் பிடிக்காத விஷயம். அதை வைத்து என்ன பண்ணுவது என்றே எனக்கு தெரியாது. ஆனால், 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிஞர்களின் படங்களை வைத்து அந்த ஓவியத்தை உருவாக்கியுள்ளார்கள் என்று சொன்ன அந்த நிமிடத்திலே அந்த ஓவியமே ஒரு கவிதையாகிவிட்டது. அது தான் வாழ்க்கை. எந்த நிமிடத்திலும் வாழ்க்கை கவிதையாகி விடும் என்பதை இந்த மேடை எனக்கு உணர்த்தியுள்ளது. ஏனென்றால், இது கவிகோ நடத்தக் கூடிய ஒரு நிகழ்வு அவரே ஒரு கவிதையாக தான் வாழ்ந்திருக்கிறார்.
சிலர் பேசும்போது கூட சொன்னார்கள் அவரை பார்க்கும் பொழுது கரடுமுரடாக தான் இருக்கும் என்று. அத்தனையும் தாண்டி ஒரு நெகிழ்வு என்பது அவருடன் இருக்கக் கூடிய ஒரு விஷயம். அவரை தொலைபேசி மூலம் அழைத்தாலே அம்மா என்று தான் கூப்பிடுவார் அப்படி ஒரு அன்பு. இந்நிகழ்ச்சிக்கு அழைத்த போது நான் லிங்குசாமியிடம் சொன்னேன். அடுத்த நாள் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள். அதனால், எனக்கு வர வாய்ப்பிருக்குமா என்று தெரியவில்லை. ஆகையால், என்னுடைய பெயரை நீங்கள் சேர்க்க வேண்டாம். என்னால் முடிந்தால் நான் வருகிறேன் என்றேன். அதற்கு அவர் தலைவருக்கு பிடித்த ஒரு நிகழ்ச்சியாக தான் இது இருக்கும். ஆகையால், நீங்கள் நிச்சயம் வருகை தரவேண்டும் என்று அழைத்தார்.
தலைவர் கலைஞர் அவர்களுக்கும் கவிகோ அவர்களுக்கும் இருந்த நட்பு அனைவர்க்கும் தெரியும். அரசியல் வாழ்க்கையில் சோதனை என்ற ஒன்று மிக சர்வ சாதாரணமாக தான் இருக்கும். தோல்வியும் அப்படி தான். மேலும், வெற்றி பெரும் நேரத்தில் அதிகப்படியான நண்பர்களும், தோல்வியை சந்திக்கும் நேரத்தில் அவர்கள் விட்டு செல்வதும் வழக்கம். ஆனால். எல்லா நேரத்திலும் தலைவருக்கு ஒரு நல்ல நண்பனாகவும் தோழனாகவும் தன்னுடைய கவிதைகளை பகிர்ந்தவர் கவிகோ. தலைவர் கலைஞர் கூட ஒரு கவிதை எழுதினார், " வெற்றி பல கண்டு நான் விருது பெற வரும் போது வெகுமானம் என்ன வேண்டுமென கேட்டால் அப்துல் ரகுமானை தருக என்பேன்" என்று கவிகோவிற்காக எழுதினார். தலைவர் கலைஞர் அவ்வளவு கொண்டாடிய ஒரு மனிதர்.
இன்றும் நாம் கவிகோவை நினைத்துப் பார்த்தால் எப்படி ஜே கே வை நினைக்கும் பொழுது அவர் எதற்கும் விட்டுக் கொடுக்காத கம்பீரத்தை நினைக்கிறோமோ, அதே போல் தான் வாழ்நாள் முழுவதும் விரும்பிய விஷயத்தையும், கவிதையையும் விட்டுக் கொடுக்காத மனிதர் கவிகோ. அவர் எழுதினால் மட்டும் போதாது அவரை சுற்றியுள்ளவர்களை எழுத வேண்டுமென சிந்தித்தவர் அவர். அதை அவர் சாதித்தும் காட்டினார். ஹைக்கூ கவிதை என்று நாம் பேசினால் எனக்கு இயக்குனர் லிங்குசாமி அவர்கள் எழுதிய இரண்டு கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. "உரை பூந்த வெள்ளம் காற்றில் அசையும் நாணல் பூக்கள்" மற்றொன்று எல்லாக் கவிதைகளுக்கும் உண்டான ஒரு கவிதையாக தான் நான் பார்க்கிறேன் "சட்டென எதையாவது உயர்த்திவிட்டு போகிறது பறவையின் நிழல்" ஹைக்கூவும் அதுவே. சட்டென ஒரு விஷயத்தை உணர்த்துவது தான் ஹைக்கூ. தற்போது என்ற இடத்திலிருந்து எதிர்காலத்தை உணர்த்தும் ஒரு விஷயமாக தான் ஹைக்கூ உள்ளது. பாரதி தனக்கு பிடித்த சில ஹைக்கூ கவிதைகளை தமிழிலே மொழி பெயர்த்தார். அதன் பின்பு தற்போது கவிகோ தான் அதை செய்தார். மேலும், தற்போது ஆங்கிலத்தில் ஹைக்கூக்கள் எழுதப்படுகிறது.
மேலும் படிக்க | கருணாநிதிக்கு "பாரத ரத்னா" விருது : வைரமுத்துவின் வாழ்த்துக் கவிதை.!
பாஷோ என்பவர் ஜாப்பனீஸ் மொழியிலும் காலத்தை உணர்த்துவதற்கு அவர்கள் சில குறியீடுகளை பயன்படுத்துவார்கள். புஸோ ஹப்ளர் என்ற பறவையை பற்றி சொல்லும்பொழுது அது இலையுதிர் காலமாக கருதப்படுகிறது. இதை தமிழில் நம் உணர்வுகளையும் வாழ்க்கையையும் எடுத்து சொன்னது கவிகோ அவர்கள் தான். தற்போது அவர் பார்த்து பல கவிஞர்கள் வந்துவிட்டனர். அதில் பலர் தான் இந்த புத்தகத்தை எழுதியுள்ளனர். மிக சிறந்த வரிகளை நான் இந்த புத்தகத்தில் பார்க்கிறேன். "உடைந்த மண்பானை ஒவ்வொரு துண்டிலும் கொஞ்சம் தண்ணீர்" என்று வந்தவாசி முருகேஷ் அவர்கள் எழுதியுள்ளார். மற்றொன்று 'கடைசி இலையும் உதிர்ந்த பின் நிலவை சூழ்ந்து கொள்கிறது மரம்" என்று இளையோன் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை அவர்கள் என்னிடம் வந்து ஒப்படைக்கும் போது இந்த கவிதைகளை பற்றி நாங்கள் பேசினோம். அதில் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு விஷயங்கள் தோன்றியது. அவர் அவரின் கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு இருந்தது. மேலும், கவிதை என்பது பொதுவுடைமையான விஷயமாக தான் இருக்கும். அதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. கவிஞனுக்கும் வாசகனுக்குமான உறவு அவரவரின் அனுபவத்திற்கேற்ற ஒன்று.
கவிகோ அவர்களின் சில கவிதைகளை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன். "கலவர பூமியிலே ரத்தம் சிந்திக் கிடந்தது, எந்த முகவரியும் இல்லை." இன்றைக்கு நாம் சந்தித்துக் கொண்டிருக்க கூடிய போர் அனைத்தும் முகவரியற்ற ரத்தத்தை தான் சிந்திக் கொண்டிருக்கிறது. அதை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது. செய்தி என்ற ஒன்று எந்தவித நிறமுமின்றி பொதுவான ஒன்றாக தான் இருக்க வேண்டும். ஆனால், தற்போது எல்லா செய்திகளுக்கும் பல நிறங்கள் வந்துவிட்டது. தனக்கு இருக்கக் கூடிய காழ்ப்புணர்வுகளை வெளிக்காட்டும் விதமாக தான் உள்ளது. அதேபோல், கவிகோ அவர்களுக்கு இருக்கக்கூடிய கோவம் நியாயமான கோபமாகவே நான் பார்க்கிறேன். முகவரியற்ற ரத்தத்தை நீ சிந்தியது வீண் தான் என அவர் கூறியது தான் உண்மை. அடுத்ததாக " வாழ்க்கை கேள்வியென்றால் விடையேது? வாழ்க்கை விடை என்றால் கேள்வியேது?", "எத்தனை அலைகள் எழுந்தால் என்ன, அத்தனை அலைகளும் அடங்கிவிடும்". பல கேள்விகளோடும் விடைகளோடும் தான் நாம் இன்று வாழ்க் கொண்டிருக்குறோம். எழுந்த அலைகள் அனைத்தும் அடங்கிவிடும் என்ற நம்பிக்கையோடும் நாம் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இது மிக சிறப்பான ஒரு நிகழ்ச்சி, பரிசு பெற்ற அனைத்து கவிதைகளுமே சிறப்பாக இருந்தது. அதை தாண்டி நம்மை நெகிழ்ச்சி அடைய செய்த பல கவிதைகளும் உள்ளது. மற்ற மொழிகளில் எழுதப்பட்ட ஹைக்கூவாக இருக்கட்டும். நான் சமீபத்தில் படித்த ஆங்கில ஹைக்கூ "snorkling a charsom as deep as fear" என்ற ஆழமான ஒரு கவிதையை ஹைக்கூ தனக்குள் வைத்துள்ளது. அதேபோல், இந்த புத்தகத்திலும் அற்புதமான வரிகள் உள்ளது. அதை கண்டெடுத்த உங்கள் அனைவர்க்கும் நன்றி, என்றார். விழாவில், டைரக்டர் சந்தோஷ், கனிமொழி எம்.பி. அவர்களுக்கு, கனிமொழி அவர்களின் உருவபடம் ஒன்றை பரிசாக அளித்தார். கலைஞர் கருணாநிதி அவர்களின் 60ஆயிரம் உருபடத்தை வைத்து, அதை கனிமொழி உருவமாக கையால் உருவாக்கப் பட்ட பிரமாண்ட போட்டோ அது என்பது குறிப்பிட தக்கது.
மேலும் படிக்க | கலைஞர் கருணாநிதி - தமிழ்நாட்டுக்கு தலையெழுத்து எழுதிய தலைவன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR