தமிழகத்தில் விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக தமிழக தலைமை செயலாளருக்கு 6 வார காலத்திற்குள் பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பருவமழை சரியாக தமிழகத்தில் பொய்த்ததால் விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்தது. தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களின் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விவசாயிகளின் உயிரிழப்பை தடுக்க எடுத்த அல்லது எடுக்க போகும் நடவடிக்கை குறித்தும் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 6 வாரத்திற்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என பிற கட்சிகளும் கூறி வருகிறது.
தேசிய குற்றப்பதிவு கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிபர கணக்கில், 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை விகிதம் 42 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வறட்சி காரணமாக தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை நடக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்திற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.