வன்முறை வளர்க்கும் PUBG ஆட்டத்தை தடை செய்க -இராமதாசு...

கல்வியை சீரழித்து, வன்முறை வளர்க்கும் பப்ஜி இணைய ஆட்டத்தை தடை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

Last Updated : Nov 10, 2019, 11:05 AM IST
வன்முறை வளர்க்கும் PUBG ஆட்டத்தை தடை செய்க -இராமதாசு... title=

கல்வியை சீரழித்து, வன்முறை வளர்க்கும் பப்ஜி இணைய ஆட்டத்தை தடை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் பப்ஜி (PUBG - PlayerUnknown's Battlegrounds) எனப்படும் இணைய விளையாட்டு வேகமாக பரவி வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரையும் அடிமையாக்கி, அவர்களின் எதிர்காலத்தை இந்த விளையாட்டு கேள்விக்குறியாக்குவது கவலையளிக்கிறது.

தென்கொரியா நாட்டைச் சேர்ந்த ப்ளு ஹோல் நிறுவனத்தின் தயாரிப்பான பப்ஜி விளையாட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த 20 மாதங்களில் இந்தியாவின் தலைநகரம் முதல் குக்கிராமங்கள் வரை அனைத்து இடங்களிலும் இந்த விளையாட்டு பரவியிருக்கிறது. இந்த விளையாட்டின் அடிப்படையே மாணவர்களையும், இளைஞர்களையும் குரூரமான வெற்றி வீரர்களாக்கி,  அடுத்தவர்களை அழித்தாவது வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்துவது  தான். இந்த எண்ணம் தான் மாணவர்களை பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாக்கியுள்ளது.

பப்ஜி விளையாட்டு என்பது மெய்நிகர் போருக்கு ஒப்பானது. இந்த விளையாட்டை விளையாடத் தொடங்குபவர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை சேகரித்துக் கொண்டு அவற்றின் மூலம் எதிரிகளை அழிக்க வேண்டும். பப்ஜி விளையாட்டை ஆடத் தொடங்கும் ஒருவர் களத்தில் உள்ள அனைவரையும்  சுட்டுக் கொலை செய்தால் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இந்த விளையாட்டை விளையாடும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கொலைகளை செய்வது தான் சாதனை என்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த உணர்வு கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஆக்க சக்தியாக திகழ வேண்டிய இளைஞர்கள் அழிக்கும் சக்தியாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. இந்த மோசமான ஆபத்து உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

பப்ஜி விளையாட்டின் தீய விளைவுகளுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. பப்ஜிக்கு அடிமையான மாணவர்கள் பலர் படிப்பை மறந்து, பல மணி நேரம் இந்த விளையாட்டில் மூழ்கிக் கிடப்பதால் தேர்வுகளில் தோல்வியடையத் தொடங்கியிருக்கிறார்கள்; ஏராளமான மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வெகுவாக குறைந்து விட்டன. அலுவலகத்தில் பணிபுரியும் இளைஞர்களின் உற்பத்தித் திறன் குறைந்து, பலர் பணி நீக்கம் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. குடும்பங்களில் இளம் தம்பதியினரிடையே  மோதல் ஏற்படுவதற்கும் பப்ஜி விளையாட்டு காரணமாக இருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக இந்த விளையாட்டு இளைஞர்களிடையே ஏற்படுத்தும் உளவியல் மாற்றம் மிக மிக ஆபத்தானது; குரூரமானது.

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான குவைத் நாட்டைச் சேர்ந்த 14 வயது சிறுவன் தமது நண்பனை கத்தியால் குத்தி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹரியானா மாநிலத்தில் இந்த விளையாட்டுக்கு அடிமையான மாணவனை அவனது தாயார் கண்டித்ததால், அச்சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். மத்திய பிரதேசத்தில் திருமணமான 25 வயது இளைஞர் ஒருவர் பப்ஜி விளையாட்டில் ஆழ்ந்திருந்த வேளையில் குடிநீர் என்று நினைத்து அமிலத்தை குடித்த கொடுமையும் நிகழ்ந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் வண்டலூர் அருகே பாலிடெக்னிக் மாணவனை அவனது நண்பன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதற்கும் பப்ஜி விளையாட்டு காரணமாக இருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் பரபரப்பான இணைய விளையாட்டாக திகழ்ந்த புளுவேல் (Blue Whale) அதற்கு அடிமையானவர்களை தற்கொலை செய்து கொள்ள தூண்டியது. ஆனால், பப்ஜி விளையாட்டு அடுத்தவர்களை கொலை செய்யத் தூண்டுகிறது. இந்த விளையாட்டின் ஆபத்தை உணர்ந்த சீனா, நேபாளம், ஜோர்டான், ஈராக்  உள்ளிட்ட நாடுகள் அதை தடை செய்துள்ளன. இந்தியாவிலும் சில கல்வி நிறுவனங்கள், சில மாணவர் விடுதிகளில் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டிருக்கிறது.

உலகம் முழுவதும் பப்ஜி விளையாட்டை 53 கோடி பேர் விளையாடி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி இருப்பவர்களின் எண்ணிக்கை 6 கோடிக்கும் அதிகமாகும். மது, போதை மருந்து ஆகியவற்றை விட பப்ஜி விளையாட்டு மிகவும் ஆபத்தானது என்று கூறும் உளவியல் வல்லுனர்கள், இந்த விளையாட்டு உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.

ஏற்கனவே டிக்டாக் போன்ற இணைய செயலிகள் கலாச்சார சீர்கேட்டை விளைவிக்கின்றன. அதையே நம்மால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், பப்ஜி போன்ற விளையாட்டுகளும் கட்டற்று அனுமதிக்கப்பட்டால்   அதன் மோசமான விளைவுகளை நம்மால் தாங்க முடியாது. எனவே, பப்ஜி விளையாட்டை தமிழக  அரசு தடை செய்ய வேண்டும்; தேசிய அளவில் தடை செய்ய மைய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.

Trending News