காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. கர்நாடக அரசின் முயற்சிக்கு உதுவும் வகையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்த திட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து தணலின் எதிர்ப்பை காட்டி வருகிறது. இந்நிலையில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட கூடாது என உத்தரவிடக் கோரி ஆணையத்திடம் தமிழக அரசு வலியுறுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கர்நாடக அரசு ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி தண்ணீரை காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்றும், ஜூலை மாதம் 30 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.