UK இல் இருந்து சென்னை வந்த 2800 பேருக்கு பரிசோதனை: அச்சப்படத் தேவையில்லை என அறிவுறை

இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் மூலம் தமிழகத்தில் இந்த புதிய வகை வைரசை நுழையவிடாமல் தடுக்க தமிழக அரசு பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 24, 2020, 10:30 AM IST
  • இங்கிலாந்திலிருந்து வந்த சுமார் 2,800 பேருக்கு கொரோனா பரிசோதனை.
  • சென்னை விமான நிலையத்தில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.
  • புதிய மாறுபாட்டுடன் உள்ள வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை-ராதாகிருஷ்ணன்.
UK இல் இருந்து சென்னை வந்த 2800 பேருக்கு பரிசோதனை: அச்சப்படத் தேவையில்லை என அறிவுறை title=

கொரோனா தொற்று உலகை பாடாய் படுத்திக்கொண்டிருக்கும் வேளையில் இந்த வைரசின் ஒரு புதிய மாறுபாடு உலக மக்களின் நெஞ்சங்களை பீதியால் நிரப்பிக்கொண்டிருக்கின்றது. இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் தற்போது பரவி வரும் இந்த வைரசை தங்கள் நாடுகளில் பரவ விடாமல் தடுக்க அனைத்து நாடுகளும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்தியாவில் 22 ஆம் தெதி இரவு முதல் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அங்கிருந்து வந்த அனைத்து பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகின்றது.

தமிழகத்திலும் (Tamil Nadu), சென்னை வந்திறங்கும் அனைத்து விமான பயணிகளுக்கும் கட்டாய சோதனை செய்யப்படுகின்றது. இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் மூலம் தமிழகத்தில் இந்த புதிய வகை வைரசை நுழையவிடாமல் தடுக்க தமிழக அரசு பல வித நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இது குறித்த நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் (Radhakrishnan) சென்னை விமான நிலையம் சென்று பார்வையிட்டார். இது குறித்து கூறுகையில், ராதாகிருஷ்ணன் அவர்கள், “இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த 21-ந்தேதி விமானத்தில் வந்த சென்னை அசோக்நகரை சேர்ந்த 25 வயது மாணவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர் கிண்டியில் உள்ள கிங் மருத்துவ நிலையத்தில் தனியறையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கிங் இன்ஸ்டிடியூட் இயக்குனர் டாக்டர் நாராயணசாமி தலைமையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ALSO READ: UK இருந்து இந்தியாவுக்கு வந்த 22 பயணிகளுக்கு கொரோனா பாசிட்டிவ்! அடுத்தது என்ன?

தற்போதுவரை அந்த மாணவர் நல்ல உடல்நலத்தோடு இருக்கிறார். அவருடைய ரத்த மாதிரியை எடுத்து, கொரோனா மரபியல் வகைப்பாட்டை கண்டுபிடிக்க மகாராஷ்டிரா புனேயில் உள்ள தேசிய நுண்கிருமி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருகிற திங்கட்கிழமைதான் முடிவுகள் தெரியும் என்று கூறியிருக்கிறார்கள். நாங்கள் சற்று விரைவுபடுத்தி அனுப்புமாறு கேட்டிருக்கிறோம். அந்த மாணவர் பயணம் செய்த இருக்கைக்கு முன்புற, பின்புற வரிசையில் இருந்தவர்களையும் கண்டுபிடித்து, அவர்களுக்கு RT-PCR பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் பல ஊர்களில் இருக்கிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் இங்கிலாந்தில் இருந்தும், அந்நாட்டின் வழியாகவும் வந்த 2,800 பேர் பட்டியல் கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் அவர்களுக்கெல்லாம் RT-PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்கள், பயணத்துக்கு 96 மணி நேரத்துக்கு முன்பு RT-PCR பரிசோதனை செய்து, கொரோனா தொற்று இல்லை என்ற உறுதிச்சான்றிதழை பெற்றுதான் தமிழகத்துக்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கு வந்தபிறகும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

அசோக்நகர் மாணவரும், அதுபோல கொரோனா பரிசோதனை செய்து, ‘நெகட்டிவ்’ சான்றிதழ் வைத்திருக்கிறார். ஆனால் இடைப்பட்ட 4 நாட்களில் எப்படியோ தொற்று ஏற்பட்டுள்ளது. இதுபோல கடந்த 14 நாட்களில் 38 ஆயிரத்து 355 பேர் வெளிநாடுகளில் இருந்து, தமிழகம் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் RT-PCR பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ என்று வந்திருந்தாலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தினமும் அவர்கள் தொலைபேசி மூலமாகவும், சுகாதாரத்துறை, ஊராட்சித்துறை மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறார்கள். யாருக்காவது நோய் அறிகுறி இருந்தால் அவர்கள் 104 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.” என்று கூறினார்.

ALSO READ: தென்னாப்பிரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கு வந்த மற்றொரு புதிய கொரோனா, மக்கள் பீதி!

முன்னதாக, ராதாகிருஷ்ணன் மற்றும் பிற அதிகாரிகள் சென்னை (Chennai) விமான நிலையத்திற்கு சென்று வெளிநாட்டிலிருந்து விமான நிலையத்தில் தரையிறங்கும் பயணிகளை சரிபார்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.

மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசங்களை அணிய வெண்டும் என்றும் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். "கொரோனா வைரஸின் (Coronavirus) புதிய மாறுபாடு பற்றிய மிக சிறிய அளவு தகவல்கள் மட்டுமே நம்மிடம் உள்ளன. எனினும், இந்த புதிய மாறுபாட்டுடன் உள்ள வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை.” என்று சுகாதாரச் செயலாளர் கூறினார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News