தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஒன்று திரள்வீர் -MK ஸ்டாலின்!

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு காவிரி டெல்டா பகுதியில் எழுகின்ற எதிர்ப்புக் குரல் டெல்லி வரை கேட்கட்டும் என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 26, 2020, 08:47 PM IST
தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஒன்று திரள்வீர் -MK ஸ்டாலின்! title=

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு காவிரி டெல்டா பகுதியில் எழுகின்ற எதிர்ப்புக் குரல் டெல்லி வரை கேட்கட்டும் என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க. ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "காவிரி டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைச் செயல் படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. இத்திட்டத்தினால் காவிரி விளைநிலப் பகுதி பாலைவனமாகும் என்ற அச்சத்தினால் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களை ஒரு பொருட்டாகக் கூட நினைக்காமல், சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டு இத்திட்டத்தைச் செயல்படுத்தத் துடிக்கிறது. வேதாந்தா குழுமமும் இதில் ஈடுபட்டிருப்பதால், அதிமுக அரசும் பதுங்குகிறது.

திராவிட முன்னேற்றக் கழகமும் தோழமைக் கட்சியினரும் விவசாயிகளின் பக்கம் உறுதியாக நின்று, ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனப் போராடி வருகின்றன. தி.மு.க.  தலைவர் என்ற முறையில் இதுகுறித்து நான் அறிக்கை வெளியிட்டதும், முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கு ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு எழுதுகிறார். இந்த ஆட்சியின் சட்டமன்றத் தீர்மானமே மத்திய அரசால் எந்த லட்சணத்தில் மதிக்கப்படுகிறது என்பதற்கு நீட் தேர்வு தொடர்பான தீர்மானமே சாட்சி. இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் என ஊடகச் செய்திக்காக ஒரு நாடகமாடுகிறார்.

அவருடைய அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கின்ற கருப்பணன், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தத் தேவையில்லை என மத்திய அரசுக்குக் கடிதமே எழுதிவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார். கருத்துக் கேட்கவே தேவையில்லை என்கிறது மாநில அரசு.

சுற்றுச்சூழல் அனுமதியே தேவையில்லை என்கிறது மத்திய அரசு. இரு அரசுகளும் கூட்டணி அமைத்துக் கொண்டு விவசாயிகளின் வயிற்றில் அடித்து வாழ்வாதாரத்தைப் பறிக்கிறது.

தி.மு.க.வைப் பொறுத்தவரை தமிழக விவசாயிகளின் நலன் காப்பதில், அவர்களுக்குத் துணைநிற்பதில் உறுதியாக இருக்கிறது. காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநிலஅரசு அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஹைட்ரோகார்பன் எடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் – ஒப்பந்தங்கள் – தனியார் பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அதற்கான அறப்போர்க் களம்தான் ஜனவரி 28ஆம் நாள்.

விவசாயிகளின் விரோதியான மத்திய பா.ஜ.க. - மாநில அ.தி.மு.க. அரசுகளைக் கண்டித்து 5 மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

  • தஞ்சை வடக்கு - தெற்கு மாவட்ட திமுக சார்பில் தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பாகவும்,
  • புதுக்கோட்டை வடக்கு – தெற்கு மாவட்ட திமுக சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலிலும்,
  • கடலூர் கிழக்கு – மேற்கு மாவட்ட திமுக சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சலகம் அருகிலும்,
  • நாகை வடக்கு – தெற்கு மாவட்ட திமுக சார்பில் வட்டாட்சியர் அலுவலகம், அவரி திடலிலும்,
  • திருவாரூர் மாவட்டம் சார்பில், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் என எழுச்சிமிகு போராட்டங்கள் நடைபெற இருக்கிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கவும், காவிரி டெல்டா பாலைவனமாகாமல் பாதுகாத்திடவும், உணவுப் பொருள் உற்பத்தியா, ஹைட்ரோ கார்பனா என்ற கேள்விக்கு விடைகாணவும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிடவும் அனைவரும் ஒன்று திரள்வீர்." என குறிப்பிட்டுள்ளார்.

Trending News