சென்னை: தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி ஒலிபரப்பாகி வந்த முதன்மையான நேரங்களில் இந்தி நிகழ்ச்சிகளைக் கட்டாயமாகத் திணித்ததுடன், சமஸ்கிருதத்தையும் திணிக்க முயற்சிப்பதற்கு, மதிமுக சார்பில் வன்மையான கண்டனம் தெரிவித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ (Vaiko). அதுக்குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாக இந்தியைத் திணித்து வருகின்ற பாஜக மோடி அரசு, அடுத்தகட்டமாக செத்துப்போன சமஸ்கிருத (Sanskrit) மொழிக்கு உயிர் கொடுக்கும் முயற்சிகளைத் தொடங்கி இருக்கின்றது. இந்தியாவில் 25,000 பேர் கூடப் பேசாத ஒரு மொழிக்கு அனைத்து மாநில மொழி வானொலிகள், தொலைக்காட்சிகளிலும் 15 நிமிடங்கள் செய்தி அறிக்கை வாசிக்க வேண்டும் என்ற கட்டளையை மோடி அரசு பிறப்பித்து இருக்கின்றது.
ALSO READ | இந்தி திணிப்பு வேண்டாம்; இல்லையேல் தமிழகம் பாஜக அரசுக்கு புரியவைக்கும்: வைகோ
மோடி பிரதமரானது முதல் "மன் கி பாத்" (Mann Ki Baat) என்ற பெயரில் முழுக்க இந்தியில் உரை ஆற்றுகின்றார். கொரோனாவுக்குப் பின்பு அண்மைக் காலமாக அவர் கலந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் வானொலியிலும் நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனக் கட்டாயப் படுத்துகின்றார்கள்.
குஜராத் (Gujarat) மாநிலத்தில் நடைபெற்ற, அனைத்து மாநில சட்டப் பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் அவர் ஆற்றிய உரையை முழுமையாக இந்தியில் ஒலிபரப்பினார்கள். தில்லி நேரு பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் சிலையைத் திறந்து வைத்த விழாவில் பேசப்பட்ட உரைகள் முழுமையாக இந்தியில் நேரலையில் வானொலியில் ஒலிபரப்பப்பட்டன.
தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி ஒலிபரப்பாகி வந்த முதன்மையான நேரங்களில் இந்தி நிகழ்ச்சிகளைக் கட்டாயமாகத் திணித்ததுடன், சமஸ்கிருதத்தையும் திணிக்க (Imposing Sanskrit) முயற்சிப்பதற்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (Marumalarchi Dravida Munnetra Kazhagam) சார்பில் வன்மையான கண்டனம் தெரிவித்துக் கொள்வதோடு, வானொலி, தொலைக்காட்சிகளில் சமஸ்கிருத செய்தி அறிக்கை வாசிப்பதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR