இனி ரயிலில் முன்பதிவு நீண்ட வரிசையில் வியர்த்து விறுவிறுக்க நிற்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை.
இனி மொபைல் செயலி மூலம் டிக்கெட்டை பதிவு செய்து விட்டு, நேரடியாக பயணத்தை தொடரலாம். அதற்கான புதிய வசதியை ரயில்வே துறை இந்த வார இறுதிக்குள் அறிமுகம் செய்வதாக தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி தமிழகம் மற்றும் கேரளாவை நோக்கி பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அதுமட்டுமின்றி தென் தமிழகத்தில் இருந்து வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிகொண்டே போகிறது. இவர்கள் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்கின்றனர்.
இதனால் கடைசி நேரத்தில் இரயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பதிவு இல்லாத டிக்கெட்டை வாங்கும் நிலை உள்ளது. பயணிகளின் இந்த கடைசி நேர பரபரப்பை குறைக்கும் வகையில் மொபைல் செயலி மூலமே முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டை பெற்று பயணிக்கும் புதிய வசதி அறிமுகபடுத்துகிறது ரயில்வே துறை.
இந்த வாரம் இறுதிக்குள் அறிமுகமாகும் இந்த செயலி மூலம் முன்பதிவு செய்யும்போது, டிக்கெட்டை பிரின்ட் எடுக்க வேண்டிய அவசியமும் இருக்காது. இதனால் ரயில் பயணிகளுக்கு இவ்வசதி வரப்பிரசாதமாக அமையும் என தெரிகிறது.