புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்!
பொறியியல் பட்டதாரிகளின் செயல்திறன் மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் வகையில் புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களுடன் முன்னணி தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்புகளின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற, பொறியியல் பட்டதாரிகளுக்கான செயல்திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில், "தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை 2018" ஐ வெளியிட்டார். pic.twitter.com/VuV6ZOTytI
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 10, 2018
இந்த புதிய கொள்கையில் வணிக நுண்ணறிவு மென்பொருள் மற்றும் பகுப்பாய்வு, தரவு கிடங்கு, கணினி தமிழ், தரவு மையம், கேமிங் மற்றும் அனிமேசன் ஆகியவற்றில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இரவு பணியில் இருக்கும் பெண்களுக்கு போக்குவரத்து வசதி, உரிய பாதுகாப்பு, தங்கும் வசதி போன்ற அம்சங்களும், வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப மூலதன மானியம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் ஆகியவை இந்த புதிய கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளது!