அக்னி வெயில் தொடங்கிவிட்டது. வெயில் காலம் வந்தாலே, பலருக்கு பாத எரிச்சல் வந்து விடும். அடுத்துவரும் வாரங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும். வெயிலின் தாக்கத்தால் பெரியவர்களைவிட, குழந்தைகளுக்குக் கூடுதலான பிரச்சினைகள் தோன்றும்.
பலரும் வெயிலை தணித்துக் கொள்ள குளிர்ந்த நீரைக் குடிப்பதும், குளிர்பானங்களை அருந்துவதுமாக உள்ளனர்.
கோடையை சமாளிப்பதற்கு பலரும் பல்வேறு முறைகளைக் கையாள்வோம். கோடையில் உடலை பாதுகாக்க பழங்களில் இருக்கும் நீர்த்தன்மையும், சுவையும் கோடைக்கு நல்ல வரப்பிரசாதமாக அமையும்
அவற்றைத் தடுக்கவும் சமாளிக்கவும் சில குறிப்புகள்...!
>வெயிலை வெல்லக் குழந்தைகளுக்கு இதமான பானங்களைக் கொடுப்பதே நல்லது. குளிர்பானங்களைப் பருகுவதை விட பழச்சாறுகளைக் கொடுப்பது உடலுக்கு ஊட்டத்தையும் உடனடி சக்தியையும் கொடுக்கும்.
>கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள் வெயிலில் அதிகமாக விளையாடுவார்கள். வெயில் ஒத்துக்கொள்ளாமல் சில குழந்தைகளுக்குத் தோலில் அரிப்பு ஏற்படலாம். இதற்கு 'போட்டே டெர்மடைட்டிஸ்' என்று பெயர்.
அல்லது சூரிய ஒளி ஒவ்வாமை என்று சொல்லலாம். சூரிய ஒளியில் இருக்கும் புறஊதாக் கதிர்கள் இந்த அரிப்பை ஏற்படுத்துகின்றன.
>கோடை காலத்தில் வெயிலில் அலையாவிட்டாலும் கூட வியர்வை வழியாக உடலில் நீர்ச்சத்து குறைந்துகொண்டே தான் இருக்கும். எனவே, அதிகளவு தண்ணீர் பருக வேண்டும். குறைந்தபட்சம் தினமும் 10 - 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
>உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு, வெயில் காலத்தில் இன்னும் சூடு அதிகரிக்கும். நீர்ச்சத்து குறைவதால், வயிறு இழுத்துப் பிடித்தல், அடிவயிற்று வலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், இளநீர், நீர்மோர் நிறைய எடுத்துக்கொள்வதன் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
>வெயில் காலத்தில் அம்மை நோய்கள் அதிகம் தாக்கும். இளநீர், பழங்கள், காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்வதன் மூலம், நீர்ச்சத்தைச் சரியாகப் பராமரித்தா அம்மை நோய்களைத் தவிர்க்கலாம்.
>குழந்தைகளைத் தினமும் இரண்டு முறை குளிக்க வைப்பதன் மூலம் உடல் சூட்டைக் குறைக்க முடியும். அடிக்கடி முகத்தைக் கழுவுவதால், சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
சருமம் பளபளப்பாக வேண்டுமா?
>கொஞ்சம் ரோஜா இதழ்களை இளநீர் விட்டு மையாக அரைக்கவும். அதை முகம், கை, கழுத்துப் பகுதிகளில் தடவ, வெயிலினால் வறண்டு போன சருமம் பளபளப்பாகும். மேலும், சரும துவாரங்களும் மூடும்.
>நுங்குத் தண்ணீரை, காய்ச்சாத பாலில் கலந்து, முகம், கழுத்து, முதுகுப் பகுதிகளில் தடவி, சிறிது நேரம் ஊறிக் குளிக்க, குளுகுளுவென உணர்வீர்கள்.
>எலுமிச்சம்பழம், ஆரஞ்சுப்பழத் தோல்களை வீணாக்காமல் சின்னச் சின்னதாக வெட்டி, வெயிலில் காய வைத்து, கொஞ்சம் கசகசா சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியில் பன்னீர் விட்டுக் குழைத்து, முகத்துக்குத் தடவினால், முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கும்.
>ஆவாரம் பூவையும் கார்போக அரிசியையும் சம அளவு எடுத்துக் காய வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியில் 1 டீஸ்பூன் எடுத்து, அதில் பன்னீரும், காய்ச்சாத பாலும் கலந்து, முகத்திலும், கழுத்திலும் தடவி, அரை மணி நேரம் கழித்துக் கழுவினால், வெயில் பட்டுக் கருத்த இடங்கள் மாறுமாம்.
>வெயிலில் அதிகம் அலைந்தால் தோலில் கொப்புளம் ஏற்படலாம். முடியின் வேர் பகுதியில் பாக்டீரியா கிருமி தொற்று ஏற்படுவதால் இந்தக் கொப்புளங்கள் ஏற்படுகின்றன. அதேபோல வியர்வை வெளியேறும் துளைகள் அடைத்துக் கொள்வதால் வரும் வியர்க்குரு பிரச்சினை குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களையும் பாதிக்கும். எனவே, வெயில் காலங்களில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பாதுகாப்பாக இருப்பது நல்லது.