சவூதி அரேபியர்கள் இனி அவர்களுக்கு மனைவிகளுக்கு அறிவிக்காமல் விவாகரத்து செய்யக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு......
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ’'சவுதி அரேபியா விஷன் 2030’' என்ற தொலை நோக்குத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி, பெண்களுக்கு அந்நாட்டில் இதுவரை அளிக்கப்படாத பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சவுதியில் சினிமா தியேட்டர் திறக்கவும் பெண்கள் கார் ஓட்டவும் விளையாட்டுகளை மைதானத்துக்குச் சென்று பார்க்கவும் அனுமதியளித்துள்ளார். அதையடுத்து, 2015-ம் ஆண்டு தான் அங்கு பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. தொடர்ந்து முகமது பின் சல்மான் சவூதியின் மன்னராக பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு, அவர்கள் தனியாக தொழில் தொடங்க, குடும்பத்தினர் அனுமதி இல்லாமல் உயர்கல்வி பயில என அவர்களுக்கான பல உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாட்டில் பெண்கள் தங்களது ஆண் பாதுகாப்பாளரின் (Gaurdian) - கணவர்/தந்தை) உரிய அனுமதி இல்லாமல் அவர்களால் திருமணம், விவாகரத்து, பயணம் என சிலவற்றை செய்யவே முடியாது. இவை தற்போது சிறிது சிறிதாக மாற்றம் அடைந்து வருகிறது. அந்த வகையில் தற்போது மிக பெரிய தீர்ப்பை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கி உள்ளது. இதுவரை அங்கு மனைவிக்கு எந்த அறிவிப்பும் கொடுக்காமல் கணவரால் விவாகரத்து செய்து விட முடியும். இந்த முறையால் மனைவிக்கு ஜீவனாம்சம் கிடைக்காமல் போய்விடுகிறது.
இது போன்ற விதிகளால் மனித உரிமை மீறல் நடக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், இனி மனைவிக்கு, குறைந்தபட்சம் குறுஞ்செய்தி மூலமாவாது தகவல் கொடுத்துவிட்டு தான் விவாகரத்து பெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான், 2030க்குள் புது சவுதியை உருவாக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி வாகனம் ஓட்ட உரிமை உட்பட பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!