வட கொரியா அணு ஆயுதம் பயன்படுத்தினால் பெரிய விளைவை சந்திக்க நேரிடும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக நாடுகளின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், வட கொரியா புதிதாக அணு ஆயுத ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவும், வட கொரியாவுக்கு ஆதரவாக சீனாவும் தங்களது உறவை பலப்படுத்தி உள்ளன.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும், அமெரிக்காவுக்கு பதிலடி தரும் விதமாக புதிய ஏவுகணைகளை பரிசோதிக்க வட கொரிய அரசு தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அமெரிக்காவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பாதுகாப்பு மந்திரி ஜிம் மேட்டீஸ், தென் கொரிய நாட்டில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். தலைநகர் சியோலில் இன்று தென் கொரிய பாதுகாப்பு துறை மந்திரியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் மேட்டீஸ்.
பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வட கொரியா புதிதாக அணு ஆயுத தயாரிப்பு மற்றும் ஏவுகணை பரிசோதனைகளை நடத்திவருகிறது. அமெரிக்கா மீதோ, அமெரிக்காவின் நேச நாடுகள் மீதோ வட கொரியா தாக்குதல் நடத்தினாலோ அல்லது அணு ஆயுதம் பயன்படுத்தினாலோ அதற்கான விளைவுகளை அந்நாடு மிக மோசமாக சந்திக்கும் என மேட்டீஸ் கூறினார்.