ரயில்வே, தனியார் விமான நிறுவனங்கள் ஏப்ரல் 15 முதல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிவு எனத் தகவல்

ஏப்ரல் 14-க்கு பிறகு லாக்-டவுன் நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு சுட்டிக்காட்டிய பின்னர், இந்திய ரயில்வே மற்றும் சில தனியார் விமான நிறுவனங்கள் ஏப்ரல் 15 முதல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Apr 1, 2020, 08:30 PM IST
ரயில்வே, தனியார் விமான நிறுவனங்கள் ஏப்ரல் 15 முதல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிவு எனத் தகவல்
Photo: PTI

புது டெல்லி: ஏப்ரல் 14-க்கு பிறகு லாக்-டவுன் நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு சுட்டிக்காட்டிய பின்னர், இந்திய ரயில்வே மற்றும் சில தனியார் விமான நிறுவனங்கள் ஏப்ரல் 15 முதல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, முழு நாடும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதனையடுத்து நாட்டில் உள்ள ஷோப்பிக் மால், மார்க்கெட், பல வணிக வளாகம் உட்பட ரயில், பஸ் மற்றும் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளியில் சுற்றக்கூடாது மற்றும் கூட்டமாக சேரக்கூடாது என்றும் அறிவிறுத்தப்பட்டது.

அதன் பின்னர், நகரங்களில் வசித்து வந்த ஏழை மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை மற்றும் போதிய பணம் இல்லாத காரணத்தால், லட்சக்கணக்கில் தங்கள் மாநிலத்தை நோக்கி நடைபயணமாக செல்லத் தொடங்கினார்கள். இதுக்குறித்து பல காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரியான திட்டமிடல் செய்யாமல் மத்திய அரசு அறிவித்த லாக்-டவுன் தான் இதற்கு காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டது. 

தங்கள் தவறை உணர்ந்த மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, அவர்களுக்கு தேவையான உணவு, இடம் அளித்து, கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு, சொந்த ஊருக்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும் பலர் பாதுகாப்பு கூடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மறுபுறம் நாடெங்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதிக்கும் பிறகும், தொடரும் என செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தி உண்மை இல்லை என்றும், அப்படி எந்தவொரு முடிவும் அரசு இன்னும் எடுக்கவில்லை என மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா கூறினார். அவரின் கூற்றை அடுத்து ஒரு நாள் கழித்து இந்திய ரயில்வே மற்றும் சில தனியார் விமான நிறுவனங்கள் ஏப்ரல் 15 முதல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.

இருப்பினும், இதுவரை அரசாங்கத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.