பிரதமர் நரேந்திர மோடியை, காலாவதியான பிரதமர் என விமர்சித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல் 11, 18, 23,29 மற்றும் மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
அந்த வகையில் சிலிகுரி மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்ற இரு பிரசார கூட்டங்களில் அவர் இன்று பேசினார்.
இதேபோல், கூச்பேஹார் மாவட்டத்தில் உள்ள டின்ஹட்டாவில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் மேற்கு வங்காளம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று உரையாற்றினார்.
அப்போது கூட்டத்தில் பேசிய அவர் தனது தலைமையிலான மேற்கு வங்காளம் மாநில அரசை தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் பிரதமர் மோடியின் ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளுக்குள் கடன் தொல்லையால் 12,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக மம்தா தெரிவித்தார்.
மேலும் தனது தலைமையிலான அரசு இந்த மாநிலத்தில் விவசாயிகளின் வருமானத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது எனவும், இதை மறுக்கும் வகையில் மேற்குவங்கத்தில் பிரசாரம் செய்து வரும் மோடி, இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு நான் தடைக்கல்லாக இருப்பதாக கூறி வருகின்றார் என குற்றம் சாட்டினார்.
தான் மோடியல்ல எனவும், தனக்கு பொய் சொல்ல தெரியாது எனவும் குறிப்பிட்டு பேசிய அவர், பிரதமர் மோடி ஒரு காலாவதியான பிரதமர் எனவும் குறிப்பிட்டார். தைரியம் இருந்தால் என்னுடன் அவர் ஒரே மேடையில் விவாதம் செய்யட்டும் எனவும், அவரது கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கிறேன் எனவும் தெரிவித்தார். அதேபோல் தனது கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு பேசினார்.