68-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக்முகமது பின் சையது அலி டெல்லி வந்துள்ளார். குடியரசு தினத்தையொட்டி நாளை பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி, தலைநகர் டெல்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 70 ஆயிரம் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு தின விழா பேரணி நடைபெறும் பகுதிகளில் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.
டெல்லியில் முக்கிய பகுதிகளில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்துப்பணிகளை மேற்கொண்டுள்ளனர். செங்கோட்டையை சுற்றி கமாண்டோ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதத் தாக்குதலை உடனே எதிர்கொண்டு முறியடிக்கும் சிறப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லை வழியே ஊடுருவும் தீவிரவாதிகள் நாட்டின் குடியரசு தினக் கொண்டாட்டங்களை சீர்குலைக்க முயற்சிக்கலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததால் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பாதுகாப்பு குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள்,ரயில் நிலையங்கள், தினசரி சந்தைகள் ஆகியவற்றில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியரசு தின விழா ஒத்திகை குடியரசு தின விழா நடைபெறும் மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காமராஜர் சாலையில் இன்று முழுவதும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.