ஜனாதிபதி நுழைந்த கோயிலில் தீட்டு கழிக்க யாகம் செய்த இந்தியா இது - இயக்குநர் பா. இரஞ்சித் ஆவேசம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரு கோயிலுக்குள் நுழைந்ததால் தீட்டு கழிக்க யாகம் செய்யப்பட்ட இந்தியா இது என இயக்குநர் பா. இரஞ்சித் தெரிவித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : May 27, 2022, 06:25 PM IST
  • சேத்துமான் படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு
  • சேத்துமான் படக்குழு செய்தியாளர் சந்திப்பு
  • சோனி லிவ் ஓடிடி தளத்ஹ்டில் வெளியானது சேத்துமான்
ஜனாதிபதி நுழைந்த கோயிலில் தீட்டு கழிக்க யாகம் செய்த இந்தியா இது - இயக்குநர் பா. இரஞ்சித் ஆவேசம் title=

நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”. இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Liv ஓடிடி தளத்தில் நேற்று வெளியானது.

உணவு அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்துக்கு ரசிகர்கள் தங்களது வரவேற்பை அளித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில் சேத்துமான் படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குநரும், தயாரிப்பாளருமான பா. இரஞ்சித்,  “எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஊடக மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு மிக்க நன்றி. சேத்துமான் திரைப்படம் ஒரு திரைப்படமா..? என்பதே எனக்கு முதலில் தெரியவில்லை. 

Ranjith

அந்தக் கதையை படித்த போது இது ஒரு ஃப்யூச்சர் ப்லிம்மாக இருக்குமா..? என்கின்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. என்னோட சந்தேகத்தை நான் இப்படத்தின் இயக்குநர் தமிழிடமும் கேட்டேன். ஆனாலும் இந்தக் கதை என்னை வெகுவாக பாதித்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

எனக்கு எப்பொழுதுமே மெயின் ஸ்டிரீம் சினிமாக்களைப் போல Parallel சினிமாக்கள் என்று சொல்லப்படும் சுயாதீனத் திரைப்படங்கள் மீதும் எனக்கு மிகப்பெரிய ஆர்வம் உண்டு. சுயாதீனத் திரைப்படங்களில் இருக்கின்ற சுதந்திரம் பிடிக்கும். அது ஒரு கனவு போன்றது. அந்தக் கனவை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இது போன்ற திரைப்படங்களை இயக்காமல் நான் கமர்ஷியல் சினிமாவிற்குள் நுழைந்துவிட்டேன்.

Ranjith

நீலம் தயாரிப்பில் வந்த படங்களிலேயே இந்தத் திரைப்படம் இயக்குநரின் முழு சுதந்திரத்தோடு வெளியான படம் என்று சொல்லலாம். அவர் என்ன நினைத்தாரோ அப்படியே படத்தை எடுத்து முடிக்க நாங்கள் உறுதுணையாக இருந்திருக்கிறோம். 

நான் பெரும்பாலும் கதைகளில் எதை சொல்லலாம், எதை சொல்லக்கூடாது என்பதை தீர்மானிக்கும் பொறுப்பைத் தான் நான் எடுத்துக் கொள்வேன். இப்படத்தில் இயக்குநர் தமிழ் எனக்கு அந்த வேலையைக் கூட கொடுக்கவில்லை. 

மேலும் படிக்க | அண்ணாச்சி படத்துக்காக களமிறங்கும் 10 கதாநாயகிகள் - பிரம்மாண்ட இசைவெளியீட்டு விழா

இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இத்திரைக்கதையில் ஒரு லேயராக கொண்டு வந்தது உண்மையாகவே மிகச் சிறப்பானது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரு கோவிலுக்குள் நுழைந்துவிட்டார் என்பதால், அந்த தீட்டை கழிக்க கோவில் சார்பாக யாகம் நடத்தப்பட்ட இந்தியா இது. 

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் குடியரசு தலைவராகவும் முடியும், சாதிய சிக்கல்களில் சிக்குண்டு போய் அல்லல்படவும் முடியும் என்பதை மிகச் சிறப்பாக காட்டிய திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும். இது போன்ற அரசியல் பேசுவதில் இயக்குநர் தமிழுக்கு நல்ல தெளிவு இருக்கிறது. சிறிய முதலீட்டில் எடுத்து இப்படம் நல்ல லாபத்தை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. 

பெருமாள் முருகனின் ரசிகன்:

நான் எழுத்தாளர் பெருமாள் முருகனின் தீவிர விசிறி. யாரும் எனக்கு அவர் எழுத்தை அறிமுகப்படுத்தவில்லை. நானாக தேடி கண்டடைந்த எழுத்தாளர் அவர். அவருடைய எழுத்து என்னை ரொம்பவே பாதித்த ஒரு எழுத்து. அவரின் நிழல் முற்றம், கூளமாதாரி, கங்கணம் போன்ற நாவல்கள் எனக்கு பிடிக்கும்.

கூள மாதாரி நாவலில் திருச்செங்கோடு குறித்த விவரணைகள் அதிகமாக இருக்கும். மிக முக்கியமான நாவல் அது. குழந்தைகளின் உலகத்தை மிக அற்புதமாக அந்த நாவல் காட்சிப்படுத்தி இருக்கும்.  அந்த உலகம் எந்தளவிற்கு ஈவு இரக்கம் அற்ற உலகம் என்பதும் அதில் உண்டு. பண்ணை அடிமை முறையில் வாழும் குழந்தைகளின் வாழ்கையை உள்ளடக்கியது அந்த நாவல். 

Ranjith

இத்திரைப்படத்தை போட்ட பணம் திரும்ப வருமா..? என்கின்ற வணிக ரீதியில் அணுகாமல், பணம் திரும்ப வராவிட்டாலும் பரவாயில்லை. இந்தக் கதையை நாம் சொல்ல வேண்டும் என்கின்ற எண்ணத்தில்தான் இதை முன்னெடுத்துச் சென்றோம். 

நீலம் தயாரிப்பில்  படம் செய்யும் இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் முழு சுதந்திரம் கொடுத்து வருகிறோம். கதை ஒரு முறை முடிவாகிவிட்டது என்றால், பின்னர் அதில் எந்தவித குறுக்கீடுகளும், நடிகர்கள் தொடர்பான சிபாரிசுகளும் இருக்காது. 

Ranjith

கான் திரைப்படவிழாவிற்கு சென்று வந்தேன். அங்கு வருகின்ற படங்கள் எதுவுமே பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அல்ல. தான் சொல்ல வரும் கருத்தில் எந்த சமரசமும் இல்லாமல் உறுதித்தன்மையோடு குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள்தான் பெரும்பாலும் அங்கு தேர்வாகின்றன. அவையே அங்கு திரையிடப்படுகின்றன. 

மேலும் படிக்க | தயாநிதி - அஜித் சந்திப்பு ஏன்?... உருவாகிறதா மங்காத்தா 2

இது போன்ற கருத்தியல் அம்சம் கொண்ட சுயாதீனத் திரைப்படங்களை எடுக்க விரும்பும் இயக்குநர்கள் நீலம் தயாரிப்பு நிறுவனத்தை அணுகலாம்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News