துப்பாக்கிச்சூடு குறித்து அச்சமின்றி தகவல் தெரிவிக்கலாம் -அருணா ஜெகதீசன்!

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அச்சமின்றி தகவல் தெரிவிக்கலாம்: முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன்! 

Last Updated : Jun 4, 2018, 05:35 PM IST
துப்பாக்கிச்சூடு குறித்து அச்சமின்றி தகவல் தெரிவிக்கலாம் -அருணா ஜெகதீசன்!  title=

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அச்சமின்றி தகவல் தெரிவிக்கலாம்: முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன்! 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்தனர்.  

இதை எதிர்த்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடலை மறு பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணையை இன்று துவங்கினார் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன்.

இதையடுத்து, விசாரணை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அருணா ஜெகதீசன் கூறியதாவது...!  

"தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வரும் ஜூன் 22-ம் தேதி வரை பொதுமக்கள் தகவல் தரலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் வருகிற ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். விசாரணை உண்மைத்தன்மையுடன், நேர்மையாக, ஒளிவு மறைவின்றி நடைபெறும். இதற்காக விசாரணை அலுவலகம் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். தகவல்கள் அஃபிடவிட் மூலமாக தாக்கல் செய்ய வேண்டும். 

மூன்று கட்டங்களாக விசாரணை நடைபெற உள்ளது. முதலாவதாக, சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் அவர்களது உறவினர்கள், பொதுமக்கள் ஆகியோரை நேரில் சந்தித்து விசாரணை செய்யப்படும். 

இரண்டாம் கட்டமாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்,  நேரடியாக அல்லது மறைமுகமாக சம்பவம் குறித்து தெரிந்தவர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் ஆகியோரிடமும், மூன்றாம் கட்டமாக காவல்துறையை சேர்ந்தவர்கள், தூத்துக்குடி முன்னாள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும். இன்று பிற்பகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு சென்று களப்பணி செய்ய இருக்கிறேன்" என அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார். 

 

 

Trending News