ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள், நாகை மீனவர்கள், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் மொத்தம் 85 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு கடந்த 2 மாத காலமாக அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பதற்றத்தை தணிக்கும் வகையில், இலங்கை சிறைகளில் இருந்து 85 மீனவர்களையும் விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முன் வந்தது.
இதைத்தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 53 மீனவர்கள் நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
அதே போல் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 24 மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இது போல திரிகோணமலை சிறையில் இருந்த 8 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது.
இவர்கள் 85 பேரும் ஒரு சில தினங்களில் தமிழகம் வந்து சேருவார்கள் என எதிர்பார்ப்பதாக, நிரபராதி மீனவர்கள் விடுதலை கூட்டமைப்புத் தலைவர் அருளானந்தம் தெரிவித்தார்.
அதே நேரம் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.