TVK Flag Elephant Controversy: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்ற போர் யானையை உடனடியாக அகற்ற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் வலியுறுத்தி உள்ளார். தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் ( BSP) சின்னமான யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என்றும் உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும் எனவும் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்ன?
இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆனந்தன் கூறுகையில்,"1968ஆம் ஆண்டு தேர்தல் சின்னம் முன்பதிவு சட்டம் (Election Symbol Reservation Act, 1968) என்று இருக்கிறது. அதில் 2002இல் சட்ட திருத்தம் செய்யப்பட்டு, 2004இல் அமலாக்கப்பட்டது. இதன்மூலம், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அசாம், சிக்கிம் மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களின் அங்கீகரிக்கப்பட்ட கட்சியோ, அங்கீகரிக்கப்படாத கட்சியோ, வேறு மாநில கட்சிகள் என யாரும் பயன்படுத்தக் கூடாது.
இதை தமிழக வெற்றிக் கழகத்தினர் தெரியாமல் பயன்படுத்தியிருக்கலாம் என்பதால் இந்த உத்தரவின் நகலை எங்கள் கட்சியின் தலைமை, தவெகவுக்கு அனுப்பியிருக்கிறோம். விஜய்யின் மேலாளர் வெங்கட் என்பவரை தொடர்புகொண்டு சட்ட விளக்கங்களை தெரிவித்தோம் மேலும், இதுதொடர்பான ஆவணங்களையும் அனுப்பியிருக்கிறோம். இதுகுறித்து இப்போதே தெரியவருகிறது என அவர்கள் கூறியுள்ளனர். ஆலோசனை நடத்தி இதுகுறித்து கூறுகிறோம் என பதிலளிப்பதாக தெரிவித்தனர்" என்றார்.
ஒரு யானையோ, இரண்டு யானைகளோ, யானை சின்னமே கொடியிலும், கட்சியிலும் பயன்படுத்தக்கூடாது என்றும் ஒருவேளை அவர்கள் யானை சின்னத்தை நீக்காவிட்டால் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனுவும், வழக்கும் தொடுக்கப்படும் என்றார். தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு இதுபோன்ற பிரச்னை வரக்கூடாது என்பதாலும் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்கவும் தற்போதே இதுகுறித்து தவெகவுக்கு தகவல் தெரிவித்திருப்பதாக கூறினார்
மேலும் படிக்க | த.வெ.க கொடியில் இரு யானைகளுக்கு நடுவே வாகை மலர்! இதற்கு இப்படியொரு அர்த்தமா?
தவெக கொடியும், பாடலும்...
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய நிலையில், அக்கட்சியின் கொடி அறிமுகம் மற்றும் கட்சியின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. சென்னை பனையூரில் உள்ள தவெகவின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் கலந்துகொண்டு கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டார். கொடியேற்றிய பின்னர் தவெகவின் பாடலையும் வெளியிட்டார்.
தொடர்ந்து நிகழ்வில் பேசிய நடிகர் விஜய், சட்டரீதியாக அனுமதிப் பெற்று தோழமை உணர்வுடன் இந்த கொடியை ஏற்றி கொண்டாடுங்கள் என தொண்டர்களிடம் தெரிவித்தார். மேலும் பலரும் எதிர்பார்க்கும் கட்சியின் மாநாட்டில் கட்சி கொடியின் பின்னணி, வரலாறு குறித்து விளக்கம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட நிலையில் முதல்முறையாக விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் - ஷோபனா ஆகியோரும் பங்கேற்றனர்.
கொடியை மாற்றுவாரா விஜய்?
இன்று காலை கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது கொடியில் இடம்பெற்றுள்ள இரட்டை போர் யானை சின்னம் குறித்து சர்ச்சை கிளம்பியிருக்கிறது. முன்னதாக, கட்சியின் பெயரை தமிழக வெற்றி கழகம் என முதன்முதலில் அறிவித்தார். அதன்பின்னர், அதில் பிழை இருப்பதாக சுற்றிக் காண்பித்த பின்னர், தமிழக வெற்றிக் கழகம் என பெயர் மாற்றம் செய்தார், நடிகர் விஜய். அந்த வகையில், தற்போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கட்சி கொடியில் யானை சின்னம் இடம்பெறக் கூடாது என பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்திருக்கும் நிலையில், இதுகுறித்து விஜய் விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | தவெக கொடி தான் தமிழ்நாட்டின் வருங்காலம் - நடிகர் விஜய் பேச்சு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ