திமுகவுக்கு சவால்விட்ட அண்ணாமலை! சட்ட நடவடிக்கைக்கு நான் தயார்!

Annamalai  Challenged To DMK Govt: என் மீதும் எனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு அடுத்த 48 மணி நேரத்தில் விளக்கம் அளிக்கா வேண்டும். இல்லையென்றால் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடுக்கப்படும் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 17, 2023, 10:49 AM IST
  • திமுகவினர் இருக்கும்போது, என்னிடம் மேலும் 500 கோடி ரூபாய் கேட்கிறார் -அண்ணாமலை.
  • திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து அனைத்து ஆதாரங்களும் உள்ளது -அண்ணாமலை.
  • அடுத்த 48 மணி நேரத்தில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

Trending Photos

திமுகவுக்கு சவால்விட்ட அண்ணாமலை! சட்ட நடவடிக்கைக்கு நான் தயார்! title=

K Annamalai Press Release: இதற்கு முன்னர் BGR நிறுவனத்திற்கு முறைகேடாக திமுக வழங்கிய ஒப்பந்தத்தை வெளிக்கொண்டு வந்ததற்கு 500 கோடி ரூபாய் இழப்பீடு கோரி சட்ட அறிக்கை, திமுக தலைவர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் துபாய் பயணம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக 100 கோடி இழப்பீடு கோரி சட்ட அறிக்கையைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை என் மீது திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள், 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சட்ட அறிக்கை அனுப்பியுள்ளார்.

ஆர் எஸ் பாரதிக்கு நன்றி:
கோடிகளில் சொத்துக்களை குவித்து வைத்திருக்கும் திமுகவினர் இருக்கும்போது, என்னிடம் மேலும் 500 கோடி ரூபாய் கேட்கிறார் திமுகவின் அமைப்புச் செயலாளர். திமுக அமைப்புச் செயலாளர் திரு ஆர் எஸ் பாரதி, DMK Files என்ற பெயரில் தமிழக பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட காணொளி மற்றும் அதைத் தொடர்ந்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நான் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பை முழுவதுமாகப் பார்த்ததற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்தக் காணொளியின் இணைப்பையும், இணையதள முகவரியையும் தாங்கள் அனுப்பிய சட்ட அறிக்கையில் வெளியிட்டதற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவினர் செய்த சொத்துக் குவிப்பை, தமிழக மக்கள் அறிந்து கொள்ள, ஏப்ரல் 14 ஆம் தேதி நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு உதவியதில் எனக்கும் மகிழ்ச்சியே.

திமுக அமைப்புச் செயலாளருக்கு உரிமை இருக்கிறதா?
தாங்கள் வெளியிட்டுள்ள சட்ட அறிக்கையில், திமுகவினருக்கு சொந்தமான 3478.18 கோடி ரூபாய் மதிப்பிலான பள்ளிகளும், 34,184.71 கோடி ரூபாய் மதிப்பிலான கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் மதிப்பு பொய்யானது  என்று  தெரிவித்துவிட்டு, அடுத்த வரியில், ஒருவர் திமுக உறுப்பினர் அல்லது நிர்வாகியாக இருந்தாலும், அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள், கட்சியின் சொத்தாக மாறாது என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

ஒரு புறம் இது திமுக சொத்து இல்லை என்றும், மறுபுறம், வழங்கப்பட்ட திமுகவினரின் சொத்து விவரம் பொய்யென்று கூறுவதற்கு மட்டும் திமுக அமைப்புச் செயலாளருக்கு உரிமை இருக்கிறதா? திமுக பள்ளி மற்றும் கல்லூரி என்ற தலைப்பின் கீழ், ஒவ்வொரு ஊரிலும் திமுகவினருக்குச் சொந்தமான பள்ளி மற்றும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் விவரங்கள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க: ஜெயலலிதா, சசிகலாவை கம்பி எண்ண வைத்தது திமுக சட்டத்துறை - உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

ஆர்.எஸ். பாரதி மழுப்புவது போல் தெரிகிறது?
உதாரணத்திற்கு, தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் மகள் நடத்தும் சன்ஷைன் சீனியர் செகண்டரி ஸ்கூல், மக்களவை உறுப்பினர் திரு கலாநிதி வீராசாமி அவர்களின் உறவினர் நடத்தும் தி சென்னை பப்ளிக் ஸ்கூல், அமைச்சர் எ.வ. வேலு அவர்களின் மனைவி நடத்தும் ஜீவா வேலு இன்டர்நேஷனல் ஸ்கூல், அருணை பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி போன்றவற்றை ஒவ்வொருவர் பெயரில் காண்பித்திருக்கிறோம்.

இவர்கள் அனைவரும் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை, திமுக தலைமையகமான அறிவாலயத்தில் ஒப்படைக்கிறார்கள் என்று தெரிவிக்கவில்லை. திரு ஆர்.எஸ். பாரதி ஏதாவது குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக, இப்படி மழுப்புவது போல் தெரிகிறது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், சென்னை மெட்ரோ ரயில் தொடர்பாக நடைபெற்ற ஊழல் குறித்து அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. அவற்றை சிபிஐயிடம் அளிக்கவுள்ளோம்.

ஆர்.எஸ். பாரதி பொறுமையாக இருக்க வேண்டும்:
உங்கள் கட்சியின் தலைவருக்கும், இந்த ஊழலில் தொடர்புடைய அனைவருக்கும் விளக்கம் கேட்டு சம்மன் வரும் வரை, திமுக அமைப்புச் செயலாளர் திரு ஆர்.எஸ். பாரதி பொறுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது மட்டும் அல்லாது, முன்னுக்குப் பின் முரணான சில கருத்துக்களை, திரு ஆர்.எஸ்.பாரதி தனது தமிழ் சுருக்கத்திலும் ஆங்கில சட்ட அறிக்கையிலும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: அண்ணாமலையிடம் ரூ.500 கோடி வாங்காம விட்டறாதீங்க - திமுகவுக்கு காயத்திரி ரகுராம் வலியுறுத்தல்

ஒன்றில் நோபல் ஸ்டீல் நிறுவனத்திடம் எந்த ஒப்பந்தமும் கையெழுத்து இடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். மற்றொன்றில் நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்திற்கும் திரு. உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

நோபல் புரோமோட்டர்ஸ், நோபல் பிரிக்ஸ், நோபல் ஸ்டீல்ஸ் என்ற நிறுவனங்களில் திரு. பஷீர் முகமது என்பவர் இயக்குனராக இருந்துள்ளார். திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு திமுக அமைப்பு செயலாளர் எதற்காக பதில் அளிக்கிறார்.

ட்விட்டர் பக்கத்திலே கேள்வி:
திமுக அமைப்புச் செயலாளர் திரு ஆர் எஸ் பாரதிக்கு ஒரு கூடுதல் தகவலையும் தெரிவிக்க விரும்புகிறோம். இதே நோபல் குழுமத்தின் ஒரு நிறுவனமான நோபல் பெரஸ் அண்ட் பவர் லிமிடெட் என்ற நிறுவனத்தில் திரு பஷீர் முஹம்மதுடன் திமுக மாநிலங்களவை உறுப்பினரான திரு எம்.எம். அப்துல்லா இயக்குனராக இருந்துள்ளார்.  

நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட செய்தியை, நேற்று எனது ட்விட்டர் பக்கத்திலே கேள்வியாக எழுப்பியுளேன். 

நோபல் பெரஸ் அண்ட் பவர் லிமிடெட், நோபல் புரோமோட்டர்ஸ், நோபல் பிரிக்ஸ், நோபல் ஸ்டீல்ஸ், இவை ஒரு குழுமத்தின் வெவ்வேறு நிறுவனங்கள் என்பதும், திமுகவினர் தொடர்புள்ள குழுமமான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம், தமிழகத்தில் முதலீடு செய்வதாக அறிவித்திருக்கும் நிதி, யாருடையது என்றும் தமிழக மக்களின் சார்பாக நான் மீண்டும் ஒருமுறை கேள்வி எழுப்புகிறேன். இந்த முறையாவது பதில் அளிப்பீர்களா?

மேலும் படிக்க: தமிழ்நாட்டிற்கு தேவை ஆன்மீக மாடல்... தோல்வியுற்ற மாடல் திராவிட மாடல் - எல். முருகன்!

ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டு:
நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் திரு ஆர்.எஸ்.பாரதி, ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் 84 கோடி ரூபாய் நான் பெற்றுக்கொண்டதாக ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளார். 

என் மீதும், பாரதிய ஜனதா கட்சியின் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு, ரூபாய் 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடாக கோருகிறேன். இதை நான் PM Cares நிதிக்கு செலுத்த விரும்புகிறேன்.

4400 கோடி ரூபாய் மோசடி செய்த ஹிஜாவு நிதி நிறுவனத்தின் உரிமையாளர்களை, 2021ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் அவர்கள் சந்தித்து, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாய் நன்கொடை பெற்றுக்கொண்ட புகைப்படம் ஒன்றை, சமூக வலைத்தளத்தில் நான் பார்த்தேன். 

100 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு இந்த நிதி மோசடியில் திரு முக ஸ்டாலின் நேரடியாக சம்மந்தப்பட்டுள்ளார் என்று நான் குற்றச்சாட்டு வைக்கலாமா என்றும், திரு ஆர்.எஸ்.பாரதியிடம் கேள்வி எழுப்புகிறேன்?

மேலும் படிக்க: அண்ணாமலை என்ன பேயா... பிசாசா... எங்களுக்கு பயமில்லை - ஜெயக்குமார்

48 மணி நேரம் கெடு:
அடுத்த 48 மணி நேரத்தில், என் மீதும் எனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால், திரு ஆர்.எஸ்.பாரதி மீது தகுந்த வழக்கு தொடுக்கப்படும் என்று மிகப் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், நீங்கள் அனுப்பிய சட்ட அறிக்கைக்கு பதிலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தமைக்கு இழப்பீடு கோரும் சட்ட அறிக்கையும் உங்களை விரைவில் வந்து சேரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே. அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க: பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறு இல்லை - டிடிவி தினகரன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News