’அசைன்மெண்ட் கோவை’ செந்தில் பாலாஜி இடத்தை கவனிக்க செல்லும் டிஆர்பி ராஜா! ஸ்டாலின் உத்தரவு

Coimbatore District In-charge Minister TRP Raja: அசைன்மென்ட் கோவை இப்போது செந்தில் பாலாஜியிடம் இருந்து அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு சென்றிருக்கிறது. இந்த முறை கோவை நாடாளுமன்ற தொகுதியை திமுக கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது திமுக.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 21, 2024, 09:37 AM IST
  • திமுக நேரடியாக போட்டியிடும் கோவை தொகுதி
  • அதிமுக, பாஜகவும் போட்டியிடுவதால் மும்முனை போட்டி
  • செந்தில் பாலாஜி இடத்தில் அமைச்சர் டிஆர்பி ராஜா நியமனம்
’அசைன்மெண்ட் கோவை’ செந்தில் பாலாஜி இடத்தை கவனிக்க செல்லும் டிஆர்பி ராஜா! ஸ்டாலின் உத்தரவு title=

கோவை திமுக வேட்பாளர்

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை புதன்கிழமை திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோவை தொகுதிக்கு கணபதி ராஜ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வந்த மகேந்திரன் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டபோதும், கோவை ராஜ்குமார் பெயர் டிக் அடிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் இவர் செந்தில் பாலாஜியின் ஆதரவை பெற்றவர் மட்டுமல்ல, முன்னாள் அதிமுககாரர். வேலுமணிக்கு நெருக்கமாக இருந்து பின்னர் அவருடன் ஏற்பட்ட அரசியல் கருத்து வேறுபாட்டால் 2020 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தவர். 2011 - 16ல் கோவை மேயராக இருந்த கணபதி ராஜ்குமார், அதிமுக மாவட்ட செயலாளராகவும் இருந்திருக்கிறார். வேலுமணியின் களப்பணி மற்றும் அரசியலை நன்கு அறிந்தவர் என்பதால் இவருக்கு திமுக வாய்ப்பு கொடுத்திருக்கிறது.

மேலும் படிக்க | ’மாட்டுக்கறி திங்கிற பொறுக்கி நாய்களே’ நாமக்கல் திமுக கூட்டணி வேட்பாளர் சர்ச்சை பேச்சுகள்

’அசைன்மென்ட் கோவை’ களத்தில் டிஆர்பி ராஜா

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது கோவை மாவட்டத்துக்கான முழுப் பொறுப்பையும் திமுக தலைமை அவரிடமே கொடுத்திருந்தது. இப்போது அவர் சிறையில் இருப்பதால் அந்த பொறுப்பு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சசர் டிஆர்பி ராஜாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. வெற்றியை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பது திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு இட்டிருக்கும் உத்தரவு. ஏனென்றால், கோவை மக்களவை தொகுதி அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் எஸ்பி வேலுமணியின் சொந்த தொகுதி. மேலும் பாஜகவும் கணிசமான செல்வாக்கை கொண்டிருக்கும் பகுதியும்கூட. இதனால் தேர்தல் களம் மிக சூடாக இருக்கும் என்பதால், களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் டிஆர்பி ராஜாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

வேலுமணிக்கு இருக்கும் நெருக்கடி

செந்தில் பாலாஜி இடத்தில் அவருக்கு நிகரான ரிசல்டை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இப்போது டிஆர்பி ராஜா இருக்கிறார். அதேபோல் அதிமுகவின் தலைமை நிலைய செயலாளரான வேலுமணிக்கும் நெருக்கடி இருக்கிறது. தன்னுடைய சொந்த மக்களவை தொகுதியில் தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இம்முறை கோவை தொகுதியை அதிமுக கைபற்றினாலே 2026 தேர்தலுக்கு அச்சாரம் போட்டுவிடலாம். ஆனால், அதனை தடுத்து 2026 சட்டமன்ற தேர்தலிலும் கொங்கு பகுதியில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் திமுக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. அதற்கு கோவை மக்களவை தொகுதி வெற்றி அவசியம். அதனால், கொங்கு பகுதியில் திமுகவின் செல்வாக்கை அதிகரிக்கவும், 2026 தேர்தலுக்கு அச்சாரம் போடும் வகையிலும் இந்த தேர்தலில் கோவையில் களப்பணி ஆற்ற இருக்கிறது திமுக.

பாஜகவில் யார் போட்டி?

பாஜகவில் கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் மற்றும் ஏபி முருகானந்தம் ஆகியோரில் ஒருவர் போட்டியிட வாய்ப்புள்ளது. அந்த பகுதியில் பாஜகவுக்கு செல்வாக்கு இருக்கும் பகுதி என்பதால் இம்முறை அந்த தொகுதியை கைப்பற்ற வேண்டும் என முனைப்பில் பாஜகவும் இருக்கிறது. மாநில தலைவர் அண்ணாமலை தான் சாந்திருக்கும் கொங்கு பகுதியில் ஒரு சீட்டையாவது வெற்றி பெற்று தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதற்காக அவர் தீவிரமாக களப்பணியாற்றிருக்கும் பகுதி கோவை. 

மேலும் படிக்க | ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு எதுவுமே செய்யாத ஒரே முதல்வர் எடப்பாடி: கனிமொழி

அந்த தொகுதியில் தோல்வியை தழுவினால் அண்ணாமலையின் மாநில தலைவர் பதவியும் பறிபோக வாய்ப்பிருக்கிறது. இதனால், தன்னுடைய செல்வாக்கை நிரூப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அண்ணாமலை. இப்படி எல்லா துருவங்களில் இருந்தும் கவனிக்கப்படும் தொகுதியாக கோவை மாறிவிட்டதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிகம் கவனிக்கப்படும் தொகுதியாக கோவை மாறியிருக்கிறது. இதனால் கோவை அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

திமுக நேரடி போட்டி

கோவை மக்களவை தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிட்டு கடைசியாக வெற்றி பெற்றது 1996 ஆம் ஆண்டு தான். அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு நேரடியாக போட்டியிட்டாலும் வெற்றி பெறவில்லை. 2019 ஆம் ஆண்டு இந்த தொகுதியை சிபிஎம் கட்சிக்கு திமுக ஒதுக்கியது. திமுக கூட்டணி தான் வெற்றியும் பெற்றது. இப்போது இந்த தொகுதியில் திமுக நேரடியாக களம் காண்கிறது. பாஜக, அதிமுக தனித்தனியாக போட்டியிட உள்ளதால் மும்முனை போட்டி நிலவுகிறது. அதிமுக, திமுகவுக்கு இணையாக பாஜகவும் கோவை மக்களவை தொகுதியில் செல்வாக்கு இருக்கிறது என கருதுவதால் இந்த தேர்தல் முடிவுகள் ஆச்சரியமாக இருக்கப்போகிறது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News