அண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கை

Annamalai, Coimbatore police: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 2 காவல்நிலையங்களில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 15, 2024, 10:55 AM IST
  • அண்ணாமலை மீது கோவை காவல்துறை வழக்குப்பதிவு
  • தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்பட்டதால் நடவடிக்கை
  • காவல்துறை மீது அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு
அண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கை title=

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாஜக தலைவரும் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை ஞாயிறன்று பிரச்சாரம் மேற்கொண்டார். கண்ணம்பாளையம், பள்ளபாளையம், பாப்பம்பட்டி பிரிவு, பட்டணம், நாகமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அண்ணாமலை, ஒவ்வொரு இடங்களிலும் அனுமதித்த நேரத்தை கடந்து பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் காமாட்சிபுரம்,  இருகூர் ஆகிய இடங்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் அண்ணாமலை தனது பிரச்சார வாகனத்தில் வந்தார். அப்போது பிரச்சாரம் மேற்கொள்ளாமல் அங்கிருந்த பொதுமக்களிடம் கை கூப்பி வணங்கி விட்டு,  இருகூர் பகுதியை நோக்கி அண்ணாமலை சென்றபோது, கோவை மாநகர காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர் பிரச்சார வாகனத்தில் பயணம் செய்யக்கூடாது எனவும் போலீசார் கூறியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி அண்ணாமலை நடந்து செல்ல முயற்சித்தார். சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் அண்ணாமலை நடந்து சென்ற நிலையில்,  போலீசருக்கும், பாஜக தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அண்ணாமலை பாஜக தொண்டர்களுடன் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசாரின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்ட அண்ணாமலை பிரச்சார வாகனத்தில் ஏறி கிளம்பிச் சென்றார். திடீரென திருச்சி சாலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடந்து சென்று மறியல் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  

மேலும் படிக்க | ஜாபர் சாதிக் வைத்திருந்த தனி நெட்வார்க்... வெளியான பரபர தகவல் - அடுத்த சிக்கப்போவது யார்?

போக்குவரத்திற்கு இடையூறு செய்தல், அனுமதி இன்றி திடீர் போராட்டத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சூலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஆளும் கட்சியும் போலீஸாரும் அராஜகப் போக்கில் ஈடுபட்டுள்ளனர். 10 மணியை தாண்டி பாஜக எப்போதும் பிரச்சாரம் செய்வதில்லை. 10 மணி ஆனதால் பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டு பிரச்சார வாகனத்தில் இருந்த மைக்கை ஆப் செய்து விட்டு வாகனத்தில் இருந்த விளக்குகளையும் அணைத்து விட்டோம். ஆனாலும் காவல்துறையினர் எங்களை தடுத்து நிறுத்தினர். அதனால்தான் நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. கோவையில் ஆளும் கட்சியின் பணத்தை ட்ரான்ஸ்போர்ட் செய்வதற்கான வேலையை போலீசார் செய்து வருகின்றனர். 

கோவையில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சபரீசன் மீட்டிங் எடுத்து வருகிறார். காவல்துறைக்கு நோக்கம் எல்லாம் திமுகவின் பணத்தை எவ்வாறு பட்டுவாடா செய்யலாம் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர். ஆளும் கட்சியின் பண பட்டுவாடாவை ஒருபோதும் பாஜக தடுத்து நிறுத்த போவதில்லை. கடந்த முறை என் மீது வழக்கு போட்ட போதும் நான் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி பேசி இருக்கிறேனா என்றெல்லாம் கேட்டேன் நான் பிரச்சாரம் முடிந்த பிறகு பிரச்சார வண்டியில் செல்லும்போது காத்திருந்த மக்களை சமாதானப்படுத்தி செல்கிறேன்.தோல்வி பயம் திமுகவுக்கு வந்ததன் காரணமாக இதுபோன்ற செயல்களை செய்து வருகின்றனர். வேண்டுமென்றே பாஜகவின் மீது வன்மத்தை வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். வேண்டுமென்றே பாஜக தொண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகிறது காவல்துறை. காவல்துறை நேர்மையாக இருக்க வேண்டும். அதிகாரிகள் நேர்மையாக இருக்க வேண்டும். காவல்துறைக்கு சட்டமே தெரியாமல் எப்படி சட்டத்தை நிலை நாட்டுவார்கள். காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவரும், கோயம்புத்தூர் தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை மீது 2 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை மற்றும் 300 பாஜகவினர் மீது 2 பிரிவுகளின் கீழ் சூலூர் 
காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஒண்டிப்புதூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக மேலும் சிங்கநல்லூர் காவல் நிலையத்தில் அனுமதியின்றி கூடுதல் , முறையற்ற தடுப்பு, வெடிபொருட்களை தவறாக பயன்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடிகர் விஜய் கட்சி போட்டி? - வந்தது ரகசிய உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News