ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் களம் இறக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என அறிவித்துள்ளனர். இன்று ஓபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனைக்குப் பின்னர், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல், தேர்தல் ஆணையத்தில் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ததற்கான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை இன்று மாலை தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து இடைத்தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இபிஎஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதால் தான், ஓபிஎஸ் ஆதரவாளர் செந்தில் முருகனின் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
நாங்கள் தான் உண்மையான அதிமுக
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து தென்னரசு என்பவரை வேட்பாளராக அறிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செந்தில்முருகன் என்பவரை வேட்பாளராக அறிவித்தனர் மற்றும் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இரண்டு தரப்பினரும் வேட்பாளரை அறிவித்ததால், யாருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது என்ற குழப்பம் ஏற்பட்டது. நாங்கள் தான் உண்மையான அதிமுக என ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் கூறிக்கொண்டாலும், இருவருக்கும் எப்படி ஒரே சின்னம் ஒதுக்குவது என்ற குழப்பம் நீடித்ததால், இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது.
மேலும் படிக்க: ஈரோடு இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்ற இபிஎஸ் அணி!
இபிஎஸ் தரப்பு தென்னரசுக்கு ஆதரவு
உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களுடன் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், மாநிலங்களவை எம்பி சிவி சண்முகம் உள்ளிட்டோர் டெல்லி சென்று தேர்தல் அதிகாரிகளை சந்தித்தனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,501 பேர் ஆதரவு அளித்த கடிதத்தை அளித்தனர். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 2665, அதில் 2,501 பேர் இபிஎஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்.
ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர் வாபஸ்
இதற்கிடையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து விலகுவதாகவும், தங்கள் தரப்பு வேட்பாளரான செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. இன்று சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போட்டியிலிருந்து வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்காக ஈரோட்டில் வாக்கு சேகரிப்போம். இரட்டை இலை முடக்கப்படக் கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு. அதன் வெற்றிக்காக பாடுபடுவோம் எனக் கூறினார்.
மேலும் படிக்க: ஈரோடு இடைத்தேர்தலில் ஒற்றை அணியாக திமுகவை எதிர்ப்போம்!
நம்முடைய அண்ணன் ஓபிஎஸ்
ஓபிஎஸ் தரப்பின் முடிவை அடுத்து, ஈபிஎஸ் அணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வேட்பாளரை வாபஸ் பெற்ற நம்முடைய அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நன்றி எனக் கூறியுள்ளார்.
பாஜகவின் விருப்பம்
எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக அணி, இடைத்தேர்தலில் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசுவை நியமித்தது கடந்த வாரம் தமிழக பாஜக தலைவர் மற்றும் சிலர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இருவரையும் சந்தித்து, "ஒன்றுபட்ட அதிமுகவில்" பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டனர். பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை தேர்தலில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பாஜக விருப்பம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அதிமுக வேட்பாளரை முடிவு செய்வது யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ