தமிழகத்தில் அனுமதிக்காத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் சுமார் 1500-க்கு மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு...!
நாடு முழுவதும் தீபாவளி பண்டியையின் போது பட்டாசுகள் வெடிக்க நேரத்தை நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி கூடுதலாக நேரம் பெற்றிருந்தது.
தமிழகத்தில் தீபாவளி பண்டியை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தமிழகம் முழுவதும் 1500 பேர் மீது சுமார் 622 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 225 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, தீபாவளி பண்டிகையன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து தமிழக அரசு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.