முறைகேடாக வெளிநாடுகளில் முதலீடு செய்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் ‛லுக்லாக்' நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.
இதனை எதிர்த்தும், தமக்கு பிறப்பிக்கப்பட்ட லுக்லாக் நோட்டீசை திரும்பப் பெற கார்த்தி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் விளக்கம் அளிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கிற்கு விளக்கம் அளித்து பதில் மனு உள்துறை அமைச்சகத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், விஜய் மல்லையாவை போன்று கார்த்தி சிதம்பரமும் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளது. அதனாலேயே அவருக்கு லுக்லாக் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதை தடுப்பதற்காகவே லுக்லாக் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை கார்த்தி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டால், இந்தியா திரும் மாட்டார். கார்த்தி சிதம்பரம் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. எனவே அவர் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.