ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி 2வது நாளாக உண்ணாவிரதம்...

ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினி 2 வது நாளாக உண்ணாவிரதம். 27 ஆண்டுகளாக சிறையிலுள்ள தங்களை விடுவிக்க கோரி முருகன் 4 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார்! 

Last Updated : Feb 10, 2019, 01:34 PM IST
ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி 2வது நாளாக உண்ணாவிரதம்... title=

ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினி 2 வது நாளாக உண்ணாவிரதம். 27 ஆண்டுகளாக சிறையிலுள்ள தங்களை விடுவிக்க கோரி முருகன் 4 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார்! 

ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆளுநர் முடிவும் ஏதும் எடுக்காததைக் கண்டித்து, நளினி நேற்று மாலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள அவர்களை விடுவிக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவு செய்ததை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றம் சென்றிருந்தது.

இந்த வழக்கில் 2018 செப்டம்பர் 6 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உத்தரவிட்டது. உடனடியாக, தமிழக அமைச்சரவைக் கூடி, அரசியல் சட்டம் 161-வது பிரிவின்கீழ் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தது. தமிழக அரசின் பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலதாமதம் செய்துவருகிறார்.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக, ஆளுநர் மீண்டும் மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளார் என்று செய்திகள் வெளிவந்தன. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் ஏதும் கேட்கவில்லை என ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டாலும், 5 மாதங்களாக முடிவை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில், 7 பேர் விடுதலை முடிவில் ஆளுநர் மாளிகையின் தாமதத்தைக் கண்டித்து வேலூர் சிறையில் உள்ள நளினி, நேற்று இரவு முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலாலுக்கு நளினி கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த முறை உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என்று கடிதத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலையில் வேலூரில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய நளினி, 5 நாட்களுக்குப் பின் அதை திரும்பப் பெற்றார். 

 

Trending News