தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கில் எந்த தளர்வுகளும் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது!!
தமிழகத்தை பொறுத்தவரை மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கில் எந்த தளர்வுகளும் இல்லை என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 1477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 15 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 411 பேர் கொரோனாவில் இருந்து சிகிச்சைப்பெற்று குணமடைந்து தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மே மாதம் 3 ஆம் தேதிவரை நாடு தழுவிய ஊரடங்கை நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு, கொரோனா பாதிக்கப்படாத பகுதிகளில், ஊரடங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கில் எந்த தளர்வுகளும் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தை அடுத்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... “ஏப்ரல் 15 அன்று மத்திய அரசு வெளியிட்ட ஆணையில், 20.4.2020-க்குப் பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள், தற்போதுள்ள கொரோனா வைரஸ் பரவுவதை கருத்தில் கொண்டு, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவெடுத்துள்ளனர்.
நோய்த் தொற்று மேலும் கொரோனா பரவுவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டியுள்ளதால், மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டம்-2005-ன் படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள மே 3 ஆம் தேதி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்யபட்டுள்ளது.
அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கெனவே அரசால் அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும். கொரோனா நோய்த் தொற்றின் தன்மையை மீண்டும் ஆராய்ந்து, நோய்த் தொற்று குறைந்தால், வல்லுநர் குழுவின் ஆலோசனையைப் பெற்று, நிலைமைக்கு ஏற்றாற்போல் தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்” என அதில் குறிப்பிடபட்டுள்ளது.