தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் கடைசி நாள் 28-ம் தேதி ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு தங்கள் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.
பா.ஜ.க சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். மேலும் தலித் ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம் என்றும் கூறினார்.
இந்நிலையில், பா.ஜ.க சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவில் உத்தரவின்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.