நேரம் வரும் போது உண்மையை நிருப்பிப்பேன்: ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்

பொய் சொல்லாத, ஊழல் செய்யாத அரசியல் பயணம் எனது, நேரம் வரும்போது தக்க சமயத்தில் உண்மையை நிருப்பிப்பேன் என ஸ்டாலினுக்கு தமிழிசை பதில் அளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 14, 2019, 07:01 PM IST
நேரம் வரும் போது உண்மையை நிருப்பிப்பேன்: ஸ்டாலினுக்கு தமிழிசை பதில் title=

சென்னை: பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுக பேசியதாக தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்தார். ஆனால் அதற்க்கு மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார். பாஜகவுடன் தான் பேசிவருவதாக தமிழிசை நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்து விலகத் தயார் என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்ட அறிக்கையில், “பச்சைப் பொய்” நிறைந்த ஒரு பேட்டியை பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அளித்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை சவுந்திரராஜன் இப்படியொரு “பொய்” பேட்டியை அளிப்பதற்காக தன்னை இந்த அளவிற்கு தரம் தாழ்த்திக் கொண்டு விட்டாரே என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மேலிடப் பா.ஜ.க. தலைவர்களின் சுயநலனுக்கு தமிழிசை சவுந்திரராஜன் கடைசிக்கட்டமாக பகடைக்காயாக ஆக்கப்பட்டுள்ளார். 

இந்த விவகாரத்தில் குறிப்பாக அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதை தமிழிசை சவுந்திரராஜன் வழி மொழிந்திருக்கிறார். “மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்” என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன். அப்படி இருவரும் நிரூபிக்கத் தவறினால் நரேந்திர மோடியும், மாநில பா.ஜ.க. தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த தமிழிசை, பாஜகவுடன் திமுக பேசியது உண்மை தான். எனக்கு கிடைத்த தகவலின்படி உண்மையை கூறினேன். நான் கூறுவதில் எப்பொழுதும் உண்மை இருக்கும். எனது அரசியல் பயணம் பொய் சொல்லாத, ஊழல் செய்யாதது. நேரம் வரும்போது தக்க சமயத்தில் உண்மையை நிருப்பிப்பேன். பாஜகவுடன் பேசவில்லை என்று முடிந்தால் ஸ்டாலின் நிருப்பிக்கட்டும். என்ன அரசியலில் விட்டு விலகச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் மு.க. ஸ்டாலின் அதிக நாட்கள் அரசியலில் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். மோடியை பற்றி பேச ஸ்டாலினுக்கு உரிமை இல்லை எனக் கூறினார்.

Trending News