சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியது ஏன்? மக்கள் அச்சத்தைப் போக்க வேண்டும்: PMK

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியது ஏன்? மக்கள் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

Last Updated : May 18, 2020, 10:12 AM IST
சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியது ஏன்? மக்கள் அச்சத்தைப் போக்க வேண்டும்: PMK title=

சென்னை மாநகராட்சிக்கான நோய்த்தடுப்பு சிறப்பு அதிகாரியாக இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்ட போது, கொரோனா விரைவில் கட்டுக்குள் வரும் என்று நம்பினேன்; அதை வெளிப்படுத்தவும் செய்தேன். ஆனால், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், அந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள், பிற அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் சிறப்பு அதிகாரி, மாநகராட்சி ஆணையர், மண்டல பொறுப்பு அதிகாரிகள் என ஏராளமான மூத்த இ.ஆ.ப. அதிகாரிகள் இருந்தும் கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த முடியாதது பொதுமக்கள் மத்தியில் இதுவரை நிலவி வந்த நம்பிக்கையை குலைத்துள்ளது.

சென்னையில் கடந்த 10-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த பொறுப்பு அதிகாரி இராதாகிருஷ்ணன், அடுத்த 5 நாட்களில், அதாவது 15-ஆம் தேதிக்குள் நோய்ப்பரவல் குறையத் தொடங்கும் என்று கூறினார். மே 13-ஆம் தேதி தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா சோதனை செய்து முடிக்கப்பட்டு விட்டதாகவும், அவர்களில் 2600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார். ஆனால், அதன்பிறகும் நோய்ப்பரவல் கட்டுக்குள் வரவில்லை என்றால் நோய்த்தடுப்பு அணுகுமுறையில் என்ன தவறு? எந்த இடத்தில் தவறு நடந்தது? கோயம்பேடு நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டு விட்டால், இப்போது வேறு எந்த ஆதாரத்திலிருந்து நோய் பரவுகிறது என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து சரி செய்ய  வேண்டும்.

சென்னையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மத்திய அரசின் சார்பில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகரும், இ.ஆ.ப அதிகாரியுமான திருப்புகழ் தலைமையிலான  உயர்நிலைக்குழு சென்னைக்கு வந்து 5 நாட்கள் தங்கியிருந்து கொரோனா தடுப்பு பணிகள் குறித்து  அதிகாரிகளுடன் ஆலோசனைகளை நடத்தி அறிவுரைகளை வழங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் ஒவ்வொரு நாளும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து காலையில் தலைமைச் செயலகத்திலும், மாலையில் அவரது இல்லத்தில் உள்ள முகாம் அலுவலகத்திலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா வைரஸ் நோய் தடுப்பில் முதலமைச்சர் பழனிச்சாமி காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது. ஆனால்,  களத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போதிய நடவடிக்கை மிகவும் கவலையளிக்கிறது.

சென்னை மாநகராட்சி 200 வார்டுகளைக் கொண்டிருந்தாலும் சென்னை மாவட்டத்தில் உள்ள 107 வார்டுகளில் மட்டும் தான் நோய்ப்பரவல் மிகவும் அதிகமாக உள்ளது. புறநகர் பகுதிகளில் அதிக பாதிப்பு இல்லை. இத்தகைய சூழலில் கூடுதல் அதிகாரிகளை நியமித்து, மண்டல அளவில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக வார்டு அளவில் கவனம் செலுத்துவது பயனளிக்கக் கூடும். இதுபோன்ற அணுகுமுறைகளை பயன்படுத்தி கொரோனாவை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் விஷயத்தில் நம்பிக்கை வார்த்தைகள் மட்டுமே பயனளித்து விடாது. கொரோனாவால் மும்பை, தில்லி ஆகிய நகரங்களுக்கு அடுத்தப்படியாக சென்னை தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையான  6750 என்பது, இந்தியாவில் மொத்தமுள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அளவை விட அதிகமாகும். இதனால் மக்களிடம் அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இன்னும் நம்பிக்கை வார்த்தைகளை மட்டும் பேசிக்கொண்டிருப்பது நம்பிக்கையைத் தராது; மாறாக சலிப்பை மட்டுமே ஏற்படுத்தும். எனவே, இனியும் கொரோனா தடுப்பு பணிகளை வார்த்தைகளில் காட்டாமல் செயலில் காட்ட வேண்டும். சென்னையில் வெகு விரைவில் கொரோனா பரவலை  முற்றிலுமாக கட்டுப்படுத்தி மக்களிடம் நிலவும் அச்சத்தை மன நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்ற  வேண்டும் என்றார். 

Trending News