இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் எதிரொலியாக பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சே அண்மையில் விலகினார். இதனால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள் காலிமுகம் பகுதியில் அமைதியான வழியில் போராடிய மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்தனர். போராட்டக்காரர்களின் முகாம்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனிடையே, திடீரென ஒருங்கிணைந்த போராட்டக்காரர்கள் மஹிந்த ராஜபக்சே ஆதரவாளர்களை விரட்டி விரட்டி தாக்க தொடங்கினர்.
ராஜபக்சேக்கு ஆதரவாக கொழும்பு நோக்கி வந்த பேருந்துகள், வாகனங்கள் தீக்கரையாக்கப்பட்டன. சில இடங்களில் ராஜபக்சே ஆதரவாளர்களின் கார்களை அடித்து உடைத்த போராட்டக்கார் அவற்றை குளத்தில் வீசினர். மேலும் ஆளும் கட்சி எம்.பிக்கள் உள்ளிட்ட தலைவர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதால் பதற்றம் உருவானது. அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சவின் பெற்றோருக்காக கட்டப்பட்ட நினைவிடத்தை அழித்த போராட்டக்காரர்கள், கொழும்பில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் அம்பாந்தோட்டையில் உள்ள அவர்களது குடும்ப வீட்டிற்கு தீ வைத்தனர். மூன்று முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இரண்டு எம்.பி.க்களின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன.
மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்
கொழும்பு மற்றும் பிற நகரங்களில் நடந்த வன்முறைகளில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டங்களில் ஆளும் கட்சி எம்.பி ஒருவர் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதவி விலகிய மஹிந்த ராஜபக்சே நேற்று பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்து குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் புறப்பட்டு திரிகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை தளத்தில் தஞ்சமடைந்தார். அங்குள்ள கடற்படை தளபதி இல்லத்தில் அவர் தங்கியிருப்பதாக தகவல் வெளியானது. மேலும், இலங்கையில் பொதுசொத்துக்கு சேதம் விளைவிப்பவர்களை கண்டதும் சுட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் பற்றி எரியும் கலவரத்தை கட்டுப்படுத்த இந்திய ராணுவம் இலங்கை விரைய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. விடுதலை புலிகள் காலத்தில் தமிழர் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டியது போன்று தற்போது தெற்கு இலங்கையில் வெடித்துள்ள வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர இந்திய ராணுவத்தின் உதவியை இலங்கை அரசு கோரியதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியாகின.
இதனிடையே, இந்தியா இலங்கைக்கு படைகளை அனுப்பாது என அந்நாட்டுக்கான இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. அதே நேரம் இலங்கையின் ஜனநாயகம், பொருளாதாரம் மீள்வதற்கு தேவையான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும் எனவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | இலங்கை நெருக்கடி: போராட்டக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பித்த அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR