ஏர் இந்தியாவை, திரு. JRD டாட்டா தொடங்கி இருந்த சமயம் அது. மூன்று வருடத்தில், இம்பீரியல் ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் ஆகியோர் இது எப்படி இவ்வளவு திறமையாக நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆள் அனுப்பினார்கள். ஆனால் அப்படி திறமையாக ஒருவர் நடத்தினால் நமக்கு பிடிக்காதோ என்னமோ, அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் அப்படிப்பட்ட நிறுவனத்தை தேசியமயமாக்கி விட்டார். உடன் திரு. JRD டாட்டா அவர்கள் பிரதமரை சந்தித்து இப்போது இலாபம் ஈட்டிவரும் இந்த நிறுவனம் அரசின் பல தவறான கொள்கைகளால் தொடர்ந்து எப்படி இலாபம் ஈட்ட முடியும் என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு பிரதமர் நேரு, இலாபம் என்ற கெட்ட வார்த்தையை என் முன்னே உபயோகிக்காதீர்கள் என்றாராம். இப்பொழுது அந்த ஏர் இந்தியா நிறுவனம் ஆயிரக்கணக்கான கோடிகள் நஷ்டத்தில் இயங்குகிறது. அதற்கு ஆனந்தப்படுங்கள். நாட்டை இப்படியே தொலைத்து விட்டு ஆனந்தமாக இருக்கலாம். தனியார் என்றால் கெட்ட வார்த்தை என்று அனைவரும் எண்ணிக் கொள்கின்றனர்.
எந்த ஒரு நிறுவனமும் தனியார் நடத்தும்போதுதான் ஈடுபாடு அதிகமாகவும் முழுமையாகவும் இருக்கும். தனியார் என்றால் நிர்வாகம் மட்டுமே தனியாரிடம் இருக்கும். அவருடைய பெயர் முன் பலகையில் மட்டுமே இருக்கும். மற்றபடி பங்குசந்தை மூலமாக அந்நிறுவனம் மக்கள் கையில்தான் இருக்கிறது. எனவே ஒரு நிறுவனம் சரியாக நடக்கவில்லை என்றால் அதை விற்றுவிடுவது என்று அர்த்தமில்லை. அதை மக்கள் கையில் கொடுப்பது பற்றியது. அது பொது நிறுவனமாக இருக்கும்போது யாரோ 10 பேரை அதிகாரிகளாக நியமித்து நடத்திக் கொள்கிறார்கள். அது தனியார் நடத்துவது போல் திறமைகரமாக இருக்குமா? ரிலையன்ஸின் பங்குகளை, 1970களில் பத்து ரூபாய்க்கு வாங்கியவர்களை கேளுங்கள். அவர்கள் எவ்வளவு சம்பாதித்து இருக்கிறார்கள் என்று. அவர்கள் அதற்கு நன்றியுடன் இருக்கிறார்கள். இது அனைவருக்கும் நடக்க வேண்டும் தானே?
ஆயிரம் அம்பானிகள் வேண்டும்.
ALSO READ | கோயில்களை பக்தி மிக்க சமூகத்தின் கைகளில் ஒப்படைப்பவருக்கே எனது ஓட்டு: சத்குரு
அப்படியும் அம்பானிக்கும் அதானிக்கும் மட்டும்தானே அதிக இலாபம் போகும் எனக் கேட்கலாம். நான் சொல்வது இதுதான்: நம் நாட்டில் ஆயிரம் பேரை அம்பானியாக உருவாக்க வேண்டும், ஏன் இரண்டு பேர் மட்டும் இருக்கிறார்கள் என்கிறேன். உதாரணமாக, சென்னையில் ஒரு சிறு தொழில் நடத்துபவரின் ஆசை என்ன என்று கேளுங்கள். தான் ஒரு நாள் அம்பானி போல் ஆக வேண்டும் என்று ஆசை வைத்திருப்பார். ஆனால் யாரேனும் அவ்வாறு வெற்றிகரமாக முன்னேறி வந்தால், நாம் அவரை கீழே இழுத்தே இருக்கிறோம். அம்பானி, அதானி இரண்டு பேர் போதாது நமக்கு. ஒரு ஆயிரம் பேர், பத்தாயிரம் பேர் இப்படி வந்தால் இந்த நாடு முன்னேற்றமாக போகும். ஆனால் நாம் அதற்கு தடை போட்டே இருக்கிறோம்.
சிலர் ஏர்டெல், ஜியோ வருவதற்காக, பிஎஸ்என்எல்-ஐ (BSNL) நீர்த்து போக செய்யலாமா என்று கேட்கிறார்கள். BSNL இல் உள்ள உள்கட்டமைப்புக்கு ஏற்றவாறு லாபம் வருகிறதா? முப்பதாயிரம் கோடி நஷ்டம் என்று கூறுகிறார்கள். இது நமது வரிப்பணம் இல்லையா? நல்லபடியாக நடத்தினால் முப்பதாயிரம் கோடி லாபம் சம்பாதித்திருக்க முடியுமே. அந்த அளவுக்கு அதில்
உள்கட்டமைப்பு உள்ளது நஷ்டம் என்றால் அது உங்களுக்கும், எனக்கும், நம் நாட்டுக்கும் தானே?
தனியார் நிறுவனங்கள் நஷ்டம் அடையவில்லையா, அவை தவறு செய்ய வில்லையா? கிங்பிஷர் ஏர்லைன்ஸ் என்ன ஆயிற்று? லலித் மோதி என்ன செய்தார்? தனியார் வங்கிகள் நட்டம் காரணமாக மூடப்பட்டு விட்டதே என்று சிலர் கேள்வி எழுப்புகிறீர்கள். ஆமாம், சிலர் தவறு செய்கிறார்கள், ஆனால் அதற்கு தானே சட்டம், சிறை என்று வைத்திருக்கிறோம். அரசு சட்டம் இயற்றுகிறது. அதை ஒழுங்காக செயல்படுத்துவது கூட அரசின் வேலை தான். ஆனால் சில அரசாங்கங்கள் ஊழல் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதை விட்டு அவர்களுடனேயே சேர்ந்து ஊழல் நடத்தின. இப்படி எல்லாம் நடந்து விட்டது. ஒரு அரசு சிறப்பாக செயல்பட ஒரு தெளிவான வரையறுக்கப்பட்ட செயல்முறை இருக்க வேண்டும்.
ALSO READ | Isha: பாறைநிலத்தையும் சோலைவனமாக்க முடியும் என்பதை உணர்த்திய சாதனை பெண்மணி
நோய்க்கு பின்னர்தான் ஆரோக்கியம் பற்றி எண்ண வேண்டுமா?
இப்போது சிலரிடமிருந்து இன்னொரு கேள்வி வருகிறது. நஷ்டம் உள்ளதை தனியார்படுத்துவது சரி. லாபகரமாக இயங்கும் அரசு நிறுவனங்களைக் கூட தனியார் படுத்துவது நியாயம் தானா? என்று. அப்படி என்றால் நமக்கு நோய் வரும் வரை ஆரோக்கியத்தை பற்றி நினைக்க கூடாது என்று சொல்கிறீர்களா? நன்றாக இருக்கும் போதே ஆரோக்கியம் பேண வேண்டும் என்ற அறிவு இப்போது எல்லோருக்கும் வந்துவிட்டது. முன்பே கூறியது போல, ஆரோக்கியம் என்பது நோய் வரும் போது மட்டும் அல்ல, பிறந்த நாளில் இருந்தே நினைக்கப்பட வேண்டும். நாம் ஏதோ ஒன்றை சாப்பிட்டோம். அடிப்படையிலேயே அதில் இருந்து தான் நோய் வருகிறது என்று நாம் புரிந்து கொண்டோம். இப்பொழுது நாம் அந்த உணவை விட்டு விடலாம் என்று நினைக்கிறோம். அப்படித் தான் இது.
அரசாங்கம் எதை நடத்த வேண்டும்?
உள் மற்றும் வெளிப்புற பாதுகாப்பு. மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது, தொழில் முனைவோர்க்கு அதற்கான உள் கட்டமைப்புகளை ஏற்படுத்தி தருவது, சட்டங்களை நிர்வகிப்பது, போன்றவைதான். அதை விட்டு ஏதோ ஒரு தொழிலை அரசு நடத்தி நான்கு காசு இலாபம் காட்டுவது முக்கியமில்லை. அந்த நிறுவனங்கள் அனைத்தையும் இப்போது அரசாங்க அதிகாரிகள் நடத்துகிறார்கள். அவர்கள் எதை நடத்தினாலும், பயந்து பயந்து நடத்துகிறார்கள். ஏனென்றால், தவறான முடிவுகளுக்கு அவர்கள் அரசாங்கத்தால் தண்டிக்கப்படக்கூடும். எப்படியும் சம்பளம் வருகிறது. எனவே எது பாதுகாப்பானதோ அதை மட்டும் தான் செய்கிறார்கள். எனவே ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தேவையானவற்றை தொடர்ந்து கண்காணித்து உடனுக்குடன் செய்வது மிகவும் முக்கியம்.
ALSO READ | மலைச்சாரலில் சத்குருவின் சிறப்புரையுடன் கோலாகலமாக நடந்த ஈஷா மாட்டுப் பொங்கல் விழா
உலகளவில் நமது விமானநிலையங்கள் மிக சிறப்பாக இருக்கின்றன
விமான நிலையங்கள் எல்லாம் தனியார் ஆவதற்கு முன்பு, வெளி விமான நிலையங்களில் இருந்து இங்கு வரும்போது நமது விமான நிலையங்கள் பார்த்து நாம் வெட்கப்பட வேண்டி இருந்தது. ஆனால் இப்போது, நமது விமான நிலையங்கள் போல எங்கும் இல்லை. நமது மும்பை, டெல்லி விமான நிலையங்களின் தரத்துக்கு இணையாக லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன் விமான நிலையங்கள் கூட இல்லை. 1970 - 80 களில் விமான நிலையம் எப்படி இருந்தது என்று ஒரு புகைப்படம் எடுத்து பாருங்கள். மூக்கைப் பிடித்துக் கொண்டு தான் செல்ல வேண்டும்.
அனைத்துக்கும் நாம் அமெரிக்காவை எடுத்துக்காட்டாக சொல்கிறோம். ஆனால் தனியார் வளர்ச்சி என்று வரும்போது நாம் அமெரிக்காவை புறக்கணித்து விடுகிறோம். அமெரிக்க தூதரகத்தில் அடுத்த பத்து நாட்களுக்கு யார் வந்தாலும் இலவசமாக விசா தருகிறோம் என்று சொல்லட்டும். எழுபது சதவிகிதம் பேர் சென்னையை விட்டு போய்விடுவார்கள். அங்கும் வேலை வாய்ப்பின்மை உள்ளதே என்று நாளிதழ்களை பார்த்து புள்ளிவிவரங்கள் பேசுவது இதற்கு உதவாது. அங்கு போய் வந்தவர்களையேனும் கேளுங்கள். அங்கு வாழ்க்கைத்தரம் எந்த அளவில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இங்கு நமது பேசுபொருள் அமெரிக்கா அல்ல. இதில் முக்கியமானது என்னவென்றால் தொழில்களை நிர்வகிக்க வேண்டியது மக்களா அரசாங்கமா என்பதுதான்.
நாட்டை மக்களே நடத்த வேண்டும்
நான் சொல்வது இது தான். நாட்டை மக்கள் நடத்த வேண்டும். அரசே அனைத்தையும் நடத்தினால் தேவையான வளர்ச்சி இருக்காது. பொதுத் துறைகள் வெற்றிகரமாக நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. 1947ல் இருந்த அந்த நிலையில் இருந்து, மேலே வர, பொதுத் துறைகள் மிக தேவையாக இருந்தன. ஆனால் இப்பொழுது நாம் மிகவும் சுறுசுறுப்பாக, ஒரு வணிகரீதியான நாடாக, வெற்றிகரமாக செல்லும் ஆர்வம் இருந்தால், புதிய மாற்றங்கள் கட்டாயம் தேவை. எப்படியும் நாம் சோஸலிச நாடாகவோ, கம்யூனிச நாடாகவோ இருக்கப் போவதில்லை என்று முடிவு செய்து விட்டோம். ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகளில் ஒரு படி முன் எடுத்து வைத்தால் இரண்டு படி பின் எடுத்து வைக்கிறோம். எனவே மாற்றங்களை விரைவாக நிகழ்த்துவதை விட்டு விவாதத்திலேயே நாட்கள் கழிப்பது சரியல்ல.
நமது நாட்டில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இப்போது அபரிமிதமாக இருக்கிறது. இப்போது இங்கு ஐம்பது சதவிகித மனிதர்கள் முப்பது வயதுக்கு கீழ் இருக்கிறார்கள். இது ஒரு மகத்தான சொத்து. ஆனால், அதை நாம் உபயோகப் படுத்துகிறோமா? திறமைகரமான, உறுதியான, கூர்மையான இளைஞர்களை நாம் உருவாக்கினால் நாடு எங்கோ போய் விடும். அதை அடுத்த பதினைந்து, இருபது வருடங்களுக்குள் நாம் செய்தாக வேண்டும். பின்னர் அந்த வாய்ப்பு முடிவடைந்து விடும். எல்லோரும் முதுமையை தொட்டு விடுவார்கள். பிறகு ஒன்றும் செய்ய இயலாது.
ALSO READ | வெற்றி பெற்றவர் வாழ்க்கை... அப்படியே பின்பற்றலாமா? சத்குரு கூறுவது என்ன..!!
உலகிலேயே நம் நாடு முக்கியமான ஜனநாயக நாடாக இருக்கிறது. இப்பொழுது ஜனநாயகம் என்றால், அனைத்தும் அரசாங்கம் மூலம் வர வேண்டும் என்று நாம் நினைத்து விட்டோம். ஜனநாயகம் என்பது மக்கள் மூலமாக தான் நிகழ வேண்டும். மக்களும் அரசுடன் இணைந்து அனைத்து மட்டங்களிலும் ஈடுபடுவதுதான் உண்மையான ஜனநாயகம். ஒரு தேசம் துடிப்பானதாக, புத்துணர்வுடன், ஒரு தெம்பான நாடாக இருக்க வேண்டும் என்றால், மக்களின் ஈடுபாடு, பங்களிப்பே பிரதானாமக இருக்க வேண்டும்.
கட்டுரையாளர் – சத்குரு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர்