வாய் துர்நாற்ற பிரச்சனையா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் உங்களுக்கு கை கொடுக்கும்

நாம் சாப்பிடும்போதெல்லாம், உணவில் இருக்கும் சர்க்கரை மற்றும் மாவுச்சத்தை வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் உடைக்கின்றன. இந்த செயல்பாட்டின் போது பாக்டீரியா ஒரு வகையான வாயுவை உருவாக்குகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 8, 2021, 06:11 PM IST
  • உலர்ந்த வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான மிகப்பெரிய காரணமாகும்.
  • ஆண்டியாக்சிடெண்டுகள் நிறைந்துள்ள கிரீன் டீயில் ஈ.ஜி.சி.ஜி உள்ளது.
  • துர்நாற்றத்தை அகற்றும் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் தயிரில் காணப்படுகின்றன.
வாய் துர்நாற்ற பிரச்சனையா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் உங்களுக்கு கை கொடுக்கும்  title=

வாய் துர்நாற்றம், பலர் அனுபவிக்கும் ஒரு பரவலான பிரச்சனையாகும். இது பல காரணங்களால் ஏற்படுகிறது. மருத்துவ மொழியில் இது பாக்டீரியாவால் ஏற்படும் ஹலிடோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. நாம் சாப்பிடும்போதெல்லாம், உணவில் இருக்கும் சர்க்கரை மற்றும் மாவுச்சத்தை வாயில் இருக்கும் இந்த பாக்டீரியாக்கள் உடைக்கின்றன. இந்த செயல்பாட்டின் போது பாக்டீரியா ஒரு வகையான வாயுவை உருவாக்குகிறது. இது துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இது தவிர, சில நேரங்களில் ஈறு நோய் அல்லது பல் சிதைவு காரணமாகவும் வாயில் துர்நாற்றம் ஏற்படுகின்றது. உங்கள் பல் மருத்துவரிடம் பேசி உண்மையான காரணம் என்ன என்பதை நீங்கள் அறிய வேண்டும். வாய் துர்நாற்றத்தின் சிக்கலை ஓரளவிற்கு சமாளிக்க உதவும், பக்க விளைவுகள் இல்லாத சில எளிதான வீட்டு வைத்தியங்களைப் பற்றி இங்கே காணலாம்.

வாய் தூய்மையை முழுமையாக கவனித்துக் கொள்ளுங்கள்

உங்களுக்கு வாய் துர்நாற்ற (Bad Breath) பிரச்சனை இருந்தால், எப்போதும் உங்களுடன் ஒரு டூத் பிரஷ்ஷை வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை நீங்கள் சாப்பிட்ட பிறகும், ஃவுளூரைடு மற்றும் ஆன்டிபாக்டீரியா கொண்ட பற்பசையால் பல் துலக்கவும். வாய் துலக்குவது மட்டும் போதாது. பாக்டீரியாக்கள் நாக்கிலும் உருவாகி துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன. எனவே, பற்களுடன் சேர்ந்து, நாக்கையும் சுத்தம் செய்யுங்கள். இது தவிர, ஃப்ளோஸ் உதவியுடன், பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள உணவுத் துகள்கள் மற்றும் பிளேக்கை அகற்றவும். இதைச் செய்வதால் வாயின் துர்நாற்றம் நீங்கும்.

போதுமான தண்ணீர் குடிக்கவும்

உலர்ந்த வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான மிகப்பெரிய காரணமாகும். வாயில் இருக்கும் உமிழ்நீர் சுரப்பிகள் போதுமான அளவு உமிழ்நீரை உற்பத்தி செய்யாதபோது, ​​வாய் வறண்டு போகத் தொடங்குகிறது. இது உடலில் தண்ணீர் (Water) இல்லாததாலும் ஏற்படும். அல்லது நீங்கள் உட்கொள்ளும் ஏதாவது உணவோ அல்லது மருந்தோ கூட இதற்கு காரணமாக இருக்கலாம். எனவே குளிர்காலத்திலும் கோடை காலத்திலும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். ஒவ்வொரு உடலின் நீர் தேவையும் வேறுபடுகிறது. எனினும், சராசரியாக ஒருவர் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீரைக் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.

ALSO READ: வெங்காயத்தின் தோலை குப்பையில் வீசாதீர்கள்: இவற்றின் நன்மைகள் சொல்லி மாளாது

கிரீன் டீ துர்நாற்றத்தை அகற்ற உதவும்

ஆண்டியாக்சிடெண்டுகள் நிறைந்துள்ள கிரீன் டீயில் (Green Tea) ஈ.ஜி.சி.ஜி உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயனளிக்கிறது. ஆண்டிமைக்ரோபையல் ரசாயன வெளியீட்டை ஏற்படுத்தும் ஈறுகளில் உள்ள உயிரணுக்களை ஈ.ஜி.சி.ஜி தூண்டுகிறது என்று 2013 ஆம் ஆண்டில் ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ரசாயனம் ஈறு நோய் மற்றும் வாய் துர்நாற்றத்திற்கு காரணமான பாக்டீரியாவை குறிவைக்கிறது. 2015 ஆம் ஆண்டு ஆய்வக ஆய்வில், கிரீன் டீயின் சாறுகள் துர்நாற்றத்தைத் தடுக்க உதவக்கூடும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தினமும் 2 முதல் 3 கப்பை விட அதிகமாக கிரீன் டீ குடிப்பது நல்லதல்ல.

வாய் துர்நாற்றத்தை அகற்ற உதவும் தயிர்

துர்நாற்றத்தை அகற்றும் லாக்டோபாகிலஸ் எனப்படும் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் தயிரில் காணப்படுகின்றன. இந்த ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உடலின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் மோசமான பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும் கட்டுப்படுத்தவும் உதவும். இதில் ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 6 வாரங்களுக்கு தயிர் சாப்பிட்ட பிறகு, ஆய்வில் பங்கேற்றவர்களில் 80 சதவீதம் பேரது துர்நாற்ற பிரச்சினையில் குறைவு ஏற்பட்டது தெரியவந்தது. தயிர் புரோபயாடிக்குகளைக் கொண்டுள்ளது. இது துர்நாற்றத்தின் தீவிரத்தை திறம்பட குறைக்க உதவும்.

பெருஞ்சீரகம் மற்றும் ஆரஞ்சு பழம்

உணவை சாப்பிட்ட பிறகு, பெருஞ்சீரகத்தை வாய் புத்துணர்ச்சிக்காக சாப்பிடும் பழக்கம் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதற்குக் காரணம் பெருஞ்சீரகத்தின் சுவை இனிமையானது மற்றும் அதில் காணப்படும் எசென்ஷியல் ஆயிலின் வாசனை சுவாசத்தைப் புதுப்பிக்க உதவுகிறது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, பெருஞ்சீரகத்தை அப்படியேவோ, அல்லது வறுத்தோ அல்லது சர்க்கரை மிட்டாயுடன் கலந்தோ சாப்பிடலாம்.

இது தவிர, ஆரஞ்சு பழமும் வாய் சுகாதாரத்தை அதிகரிக்க உதவும். ஆரஞ்சு, வைட்டமின் சி நிறைந்தது. உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்க இது உதவுகிறது. இதனுடன் வாய் துர்நாற்றத்தை அகற்றவும் இது பெரும் உதவுயாக இருகிறது.

ALSO READ: புளியால் இத்தனை நன்மைகள் ஏற்படுமா? புல்லரித்துப் போகவைக்கும் health news!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News