COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) பயன்படுத்துவதை நிறுத்த எந்த காரணமும் இல்லை என்று ஸ்பெயின் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) திங்களன்று எடுத்த முடிவைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிசோதனையை நிறுத்தியுள்ளன எனினும் ஸ்பெயின் அவ்வாறு செய்யவில்லை.
மற்றொரு பரிசோதனை தொடங்கிய ஒரு வாரத்திற்குள் நிறுத்தப்பட்டதாக இங்கிலாந்து அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார். பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இந்த ஆய்வுக்கு நிதி அளித்துள்ளது. இந்த பரிசோதனையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொள்கிறது, இதில் 40,000 சுகாதார பணியாளர்கள் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில நோயாளிகளுக்கு இது உதவியாக இருக்கும் என்ற ஆரம்ப அறிக்கைகளுக்குப் பிறகு, பல நாடுகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கோவிட் -19 க்கு சாத்தியமான சிகிச்சையாகப் பயன்படுத்த அனுமதித்தன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த மருந்தை வாங்க ஆர்வமாக இருந்தார். அவர் அந்த மருந்தை 'கேம் சேஞ்சர்' என்று அழைத்தார். பின்னர் அவர் தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக இந்த மருந்தை உட்கொள்வதாக அறிவித்தார்.
இருப்பினும், சில சமீபத்திய ஆய்வுகள் இந்த மருந்து குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன. பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் தி லான்செட் கூறுகையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வழங்கப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இறப்புகள் ஏற்பட அதிக ஆபத்து உள்ளது என்றும் அவர்களின் இதய துடிப்பு ஆபத்தான முறையில் ஒழுங்கற்றதாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஒரு லான்செட் ஆய்வில் இந்த மருந்தை உட்கொண்ட நோயாளிகளிடையே அதிக இறப்பு விகிதம் கண்டறியப்பட்டது.
ஸ்பெயினில் உள்ள மருத்துவமனைகளில் இந்த மருந்தை பயன்படுத்தி செய்யப்படும் பரிசோதனையை நிறுத்த வேண்டும் என்பதற்கான போதுமான ஆதாரம் இல்லை என்று ஸ்பெயினின் சுகாதார கண்காணிப்புக் குழு AEMPS தெரிவித்துள்ளது.
புதன்கிழமை, பிரான்சின் சுகாதார அமைச்சகம் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தது. இதனால், சிறப்பு சூழ்நிலையில் COVID-19 நோயாளிகளுக்கு மருத்துவர்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொடுக்க முடியும்.
பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் உள்ள மருந்து ஏஜென்சிகள் மருத்துவ பரிசோதனைகள் தவிர, இந்த மருந்து வேறு எங்கும் பயன்படுத்தப்படக்கூடாது என்று கூறியது. பரிசோதனைகளில் சாத்தியமான அபாயங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று பெல்ஜிய மருத்துவ அதிகாரி ஒருவர் கூறினார்.
தி லான்செட் மற்றும் WHO முடிவைப் பற்றிய ஆய்வை ஜெர்மனி பரிசீலித்து வருகிறது, ஆனால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
அமெரிக்க உணவு மற்றும் மருந்துத் துறை அவசரகாலத்தில் COVID-19 நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்த மருத்துவர்களை அனுமதித்துள்ளது, ஆனால் அவற்றை சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை.
மொழியாக்கம் : நேசமணி விக்னேஸ்வரன்