கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோட்டில் வெள்ளிக்கிழமை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (Air India Flight) விபத்துக்குள்ளானது. இதில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான கேப்டன் தீபக் வி சாத்தே, இந்திய விமானப்படையின் முன்னாள் அதிகாரியாவார். இவர் அம்பாலாவில் 17 ஆவது படைப்பிரிவில் MiG -21 போர் விமானத்தை ஓட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பணியில் இருந்த படைப் பிரிவு 1999 கார்கில் போரில் ஈடுபட்டிருந்தது.
விமானப்படை பயிற்சி அகாடமியில் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றிய சாத்தே, IAF-ல் இருந்து அவரது பணிக்காலம் முடியும் முன்னே ஓய்வு பெற்றார். சிவிலியன் பணிகளில் சேர ஆர்வம் கொண்டு ஏர் இந்தியாவில் சேர்ந்தார்.
கேரளாவில் நிகழ்ந்துள்ள மிக மோசமான விமான பேரழிவுகளில் ஒன்றான இந்த விபத்தில், வந்தே பாரத் பணித் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து திரும்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், "டேபிள் டாப்" கோழிக்கோடு விமான நிலையத்தின் (Kozhikode Airport) ஓடுபாதையில் வழுக்கி சமநிலை இழந்ததால் ஒரு பெரும் விபத்து ஏற்பட்டது. விமானத்தில் இருந்த 190 பேரில், விமான பைலட்டுகள் உட்பட குறைந்தது 17 இறந்தனர். வெள்ளிக்கிழமை பலத்த மழைக்கு மத்தியில் விமானம் தனது இரண்டாவது முயற்சியில் தரை இறங்கிய போது, 35 அடி கீழே இருந்த ஒரு பள்ளத்தில் சரிந்தது.
ALSO READ: Air India Plane crash: ஏர் இந்தியா விமானம் விபத்து.. நடந்தது என்ன?
சிவில் ஏவியேஷன் இயக்குனரின் கூற்றுப்படி, B737 விமானமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் AXB 1344, 190 பேருடன் 10 ஆம் எண் ஓடுபாதையில் தரை இறங்கியது. மிக அதிக மழை காரணமாக தெரிவு நிலை 2,000 மீட்டராக இருந்தது. ஆனால், அப்போதிருந்த மழை மற்றும் ஓடுபாதையின் நிலை காரணமாக எதிர்பாராத விதத்தில், அருகில் இருந்த பள்ளத்தில் சரிந்து விமானம் இரண்டு துண்டுகளாகியது.
விமானத்தை ஓட்டிய பைலட்டுகள் தங்களால் ஆன வரை விமானத்தை விபத்திலிருந்து காக்க முயன்றுள்ளார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் முறை தரை இறங்க சூழல் சரியில்லாததால், அந்த முயற்சியை கைவிட்டு விட்டு, பைலட்டுகள் இரண்டாவது முறை முயன்றுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக அவர்களால் பாதுகாப்பாக தரை இறங்கும் முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை.