சபரிமலை விவகாரம்; வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் கனக துர்கா

சபரிமலை கோவிலுக்குள் காவல்துறை பாதுகாப்புடன் சென்ற கனக துர்காவை, அவரது குடும்பத்தார் சொந்த வீட்டில் அனுமதிக்க மறுத்துள்ளனர்!

Updated: Jan 23, 2019, 10:47 AM IST
சபரிமலை விவகாரம்; வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் கனக துர்கா

சபரிமலை கோவிலுக்குள் காவல்துறை பாதுகாப்புடன் சென்ற கனக துர்காவை, அவரது குடும்பத்தார் சொந்த வீட்டில் அனுமதிக்க மறுத்துள்ளனர்!
 
சபரிமலை கோவிலுக்குள் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய முடியாது என்ற நிலைமை மாற்றி, கடந்த ஜனவரி 2-ஆம் நாள் கனக துர்கா(39), பிந்து அமினி (40) ஆகிய இரு பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் காவல்துறை பாதுகாப்புடன் சென்று தரிசனம்  செய்தனர்.

பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, சபரிமலைக்கு சென்ற கனகா துர்கா, பிந்து அமினி ஆகிய இருவரும் சம்பவநாள் அடுத்து தலைமறைவாகினர்.  இருவார கால இடைவெளிக்கு பின்னர் வீடு திரும்பிய கனக துர்கா, தனது வீட்டு உறுப்பினர்களால் தாக்கப்பட்டார். எதிர்ப்புகளை மீறி கோவிலுக்குள் நுழைந்ததன் காரணமாக அவரது மாமியார் கனக துர்கா-வை கட்டையால் தாக்கியதாக தெரிகிறது.

இதன் காரணமாக பலத்த காயமடைந்த கனக துர்கா, மலப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் சபரிமலை கோவிலுக்குள் சென்ற கனக துர்கா மற்றும் பிந்து அமினி-க்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி கோழிக்கோட்டில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய பிந்துவிற்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 காவலர்கள் 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள். அதேப்போல் குடும்பத்தார் தாக்குதலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கனக துர்காவிற்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது உடல்நலம் சற்று தேறியுள்ள கனக துர்கா, மலப்புரத்தில் உள்ள தனது வீட்டிற்கு மீண்டும் சென்றுள்ளார். ஆனால் கனகதுர்காவை அவரது வீட்டில் அனுமதிக்க அவரது குடும்பத்தார் மறுத்துள்ளனர்.  ஆச்சாரத்தை மீறி சபரிமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததன் மூலம் அங்குள்ள சடங்குகளையும் மாற்றி விட்ட கனகதுர்கா பாவம் செய்துள்ளார், எனவே அவரை தங்களது வீட்டஅல் அனுமதிக்க இயலாது என அவரது குடும்பத்தார் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளனர்.

புகுந்த வீட்டில் மட்டும் அல்லாமல், பிறந்த வீட்டிலும் அவரை கனக துர்காவை அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனையடுத்து தனித்து விடப்பட்ட கனக துர்கா-வை காவல்துறை பாதுகாப்பில் வைத்துள்ளனர்.