மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் படத்தில் இடம்பெற்றுள்ள கமலா கலாசா பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சிம்பு நடிப்பில் வெளியான வாலு, விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் ஆகிய திரைப்படங்களை இயக்கிய விஜய் சந்தர் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து சங்கத்தமிழன் என பெயரிடப்பட்ட படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா, மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் நாசர், சூரி, அசுதோஷ் ராணா, ரவி கிஷான், ஜான் விஜய் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் முதல் பாடலான கமலா லிரிக்கல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முன்னதாக இப்பாடலின் ப்ரோமோ மற்றும் டீஸரினை படக்குழுவினர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
விவேக்-மெர்வின் இசை அமைத்துள்ள இந்த பாடலுக்கு வேட்டி கட்டி விஜய் சேதுபதி குத்தாட்டம் போடுவது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் ஒரு செய்தியாக பிக் பாஸ் வீட்டில் சிக்கியிருக்கும் சான்டி மாஸ்டர் இப்பாடலுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ளது பாடல் காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.