ஜெயிக்குறத பத்தி மட்டும் யோசிங்க -SRH-ஐ ஐபிஎல் பைனலுக்கு அழைத்துச் சென்ற கம்மின்ஸின் மந்திர சொல்

Pat Cummins ; சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் 2024 தொடரில் இறுதிப் போட்டிக்கு செல்ல மிக முக்கியமான காரணம் அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தான். அவரின் நேர்மறையான அணுகுமுறை அந்த அணியை இவ்வளவு பெரிய உயரத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 26, 2024, 11:17 AM IST
  • ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி
  • இரண்டாவது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா?
  • கேப்டன் என நிரூபித்த கம்மின்ஸ் மீண்டும் சாதிக்க வெயிட்டிங்
ஜெயிக்குறத பத்தி மட்டும் யோசிங்க -SRH-ஐ ஐபிஎல் பைனலுக்கு அழைத்துச் சென்ற கம்மின்ஸின் மந்திர சொல் title=

சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் தொடரில் 2016 ஆம் ஆண்டு டேவிட் வார்னர் தலைமையில் ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தாலும், அதன்பிறகு ஆடிய ஐபிஎல் தொடர்கள் எல்லாம் சுமாராகவே இருந்திருக்கிறது. சில சீசன்கள் எல்லாம் படுமோசம் என்ற அளவுக்கு அந்த அணி ஆடியிருக்கிறது. உதாரணமாக ஐபிஎல் 2023ல் சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியில் கடைசி இடமான 10வது இடத்தைப் பிடித்தது. இதனால் மீண்டும் சாம்பியன் பட்டத்தை நோக்கி செல்ல வழியை தேடிக் கொண்டிருந்த நேரத்தில் தான், ஆஸ்திரேலிய அணியை கடந்த ஒருநாள் உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை நோக்கி வழி நடத்தி சென்ற கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் அணியின் கண்ணில் பட்டார். அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ஏற்கனவே கம்மின்ஸூடன் இணைந்து பணியாற்றி இருந்ததால், அவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொண்டு வருவதில் விடாப்பிடியாக இருந்தார்.

டேனியல் வெட்டோரி  ஏன் கம்மின்ஸ் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்தார்? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். அதற்கு காரணம், ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக கடந்த ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி தீவிர பயிற்சியில் ஈடுபட்டவர் தான் கம்மின்ஸ். அதற்கு பலனாக அந்த அணி சாம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தது. அந்தளவுக்கு தான் எடுத்த பொறுப்பை முழுமையாக முடிக்கும் வரை தீவிரமாக இருப்பவர் என்பதால் கம்மின்ஸ் மீது வெட்டோரிக்கு தனிப்பட்ட நம்பிக்கை இருந்தது. அதன்படியே ஐபிஎல் 2024 தொடருக்கான ஏலத்தில் சுமார் 20 கோடி ரூபாயை கொட்டிக் கொடுத்து வாங்கியது சன்ரைசர்ஸ் அணி.

மேலும் படிக்க | KKR vs SRH: கோப்பையை வெல்லப்போவது யார்...? ஐபிஎல் வரலாறு சொல்லும் பதில் இதுதான்!

இவ்வளவு விலை கம்மின்ஸூக்கு தேவையா? என அப்போது ஏலத்தில் உட்கார்ந்திருந்த மற்ற ஐபிஎல் அணி உரிமையாளர்களே முனுமுனுத்தனர். லக்னோ அணியின் உரிமையாளர் கோயங்கா, மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி உள்ளிட்டோர் வெளிப்படையாகவே சிரித்தனர். அந்த நேரத்தில் ஏல டேபிளில் உட்கார்ந்திருந்த காவ்யா மாறன் கூட அவர்களின் கேலி சிரிப்புக்கு, என்ன ரியாக்ஷன் கொடுப்பது என தெரியாமல் குமுறலுடன் தான் உட்கார்ந்திருந்தார். ஆனால், கம்மின்ஸ் தன்னை இத்தனை கோடிகள் கொட்டி வாங்கிய விலைக்கு வொர்த்தானவர் என்பதை சன்ரைசர்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று இப்போது நிரூபித்து காண்பித்திருக்கிறார். 

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதும், ஒரு அணியாக எப்படி விளையாட வேண்டும் என்பதை எல்லா வீரர்களுக்கும் தெளிவுபடுத்தினார். அனைத்து வீரர்களையும் அரவணைத்த அவர், அவரவர் திறமை முழுமையாக பயன்படுத்துமாறு முழு சுதந்திரம் கொடுத்து ஊக்கப்படுத்தினார். இதுவே அந்த அணியின் வெற்றிக்கான மந்திரமாகவும் மாறியது. இதுவரை இல்லாதளவுக்கு சன்ரைசர்ஸ் அணியின் ஆட்டம் ஐபிஎல் 2024ல் தனியாக மிளிர்ந்தது. மற்ற அணிகள் எல்லாம் அந்த அணியின் பேட்டிங்கை பார்த்து கதிகலங்கும் அளவுக்கு மாறியது. 250 ரன்களை சர்வசாதாரணமாக கடக்கும் அணியாக ஐபிஎல் 2024ல் ஒரு அணி இருந்தது என்றால் சன்ரைசர்ஸ் அணி தான் அது. 

அதற்கு காரணம் அணி மீட்டிங்கில் உரையாடும்போது கம்மின்ஸ் பயன்படுத்திய வார்த்தைகள் அவ்வளவு சக்தி வாய்ந்தவையாக இருந்ததன. ஜெயிக்குறத பத்தி மட்டும் யோசிங்க, உங்களுக்கு எது வருமோ? எது பலமோ அதனை முழுமையாக வெளிக்காட்டுங்கள் என கம்மின்ஸ் கூறினார். அத்துடன் எதிரணியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாத அவர், சன்ரசைர்ஸ் அணி விளையாடி மட்டுமே ஜெயிக்க வேண்டும் என விரும்பினார். அதாவது மற்ற அணிகள் தோற்க வேண்டும், மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு அதன்மூலம் கிடைக்கும் புள்ளிகளை வைத்து அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம் என்றெல்லாம் கம்மின்ஸ் கணக்கு போட்டதே கிடையாது.

அதற்கு ஒரு உதாரணம், கேகேஆர்- ஆர்ஆர் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. ஒருவேளை அந்தப் போட்டி நடைபெற்று ராஜஸ்தான் வென்றிருந்தால், ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் அந்த அணி இரண்டாம் இடத்தை பிடித்து குவாலிஃபையர் ஒன்று விளையாடி இருக்கும். ஆனால் மழையால் அது நடக்கவில்லை என்ற நிலையில், இது குறித்து கம்மின்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது, இது உங்களுக்கு சாதகமானதாக இருக்குமே என கேட்டதற்கு, சற்றும் யோசிக்காமல் கம்மின்ஸ் கொடுத்த பதில் என்னவென்றால்,  ‘ ஓ.. காட் அப்படி நடக்கக்கூடாது’ என்று தான் சொன்னார். 

வேறு யாராக இருந்தாலும் நல்ல விஷயம் என மகிழ்ச்சி தெரிவித்திருப்பார்கள், ஆனால் கம்மின்ஸ் தன்னுடைய அணி விளையாடி வெற்றி பெற்று அந்த சாம்பியன் கோப்பையை வெல்ல வேண்டும் விரும்பியதால் இன்று ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி இருக்கிறது. இன்னொரு உதாரணமும் கூட இருக்கிறது. வரவிருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் குறித்து செய்தியாளர்கள் கேட்கிறார்கள், அதற்கு கம்மின்ஸ் சொன்ன பதில், " மற்ற 3 அணிகள் எவை என எனக்கு தெரியாது, ஆனால் ஆஸ்திரேலியா நிச்சயம் இருக்கும்" என கம்பீரமாக சொன்னார். அந்த கம்பீரம் தான் அவரை கேப்டனாக உயர வைத்திருக்கிறது, வழி நடத்த வைத்திருக்கிறது. அதனால், அவரது தலைமையில் சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் வாகை சூடினால் வியப்பேதும் பட தேவையில்லை. ஏனென்ன்றால் ஜெயிக்க கற்றுக் கொடுக்கும் ஒரு சிறந்த கேப்டன் பாட் கம்மின்ஸ்.

மேலும் படிக்க | ஐபிஎல் இறுதிப்போட்டி வரை வந்த வெளிநாட்டு கேப்டன்கள் - பட்டியல் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News