இந்தியா தோல்விக்கு முக்கிய காரணமான யார் இந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ்?

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி, அந்நாட்டுக்கு எதிராக முதல் டி-20 போட்டியை இன்று ஆடியது. இந்த போட்டி பிரிஸ்பென்னே கப்பா மைதானத்தில் நடைப்பெற்றது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Nov 21, 2018, 08:06 PM IST
இந்தியா தோல்விக்கு முக்கிய காரணமான யார் இந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ்?
Pic Courtesy : @cricketcomau

கிரிக்கெட் போட்டிகளில் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக ஆட்டத்தில் பெரும் திருப்பம் ஏற்பட்டு சுவாரஸ்யம் கூடும். எப்போதோ ஒருமுறை நிகழும் இந்த சம்பவம் மறக்க முடியாத போட்டியாக மாறும். அப்படி ஒரு போட்டி தான் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மோதிய முதல் டி-20 போட்டி அமைந்தது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும், அடுத்தடுத்து விக்கெட்டையும் பறிக்கொடுத்தனர். இதற்கிடையில் ஆட்டத்தின் 16.1 ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மழை நின்ற பின்பு 20 ஓவர் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆட்டம் தொடர்ந்தது.

17 ஓவர்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தார். 

இதனையடுத்து 17 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஓவருக்கு 10 ரன்கள் அடித்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில், ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தினை இந்திய அணி வீரர்கள் வெளிப்படுத்தினர். தொடக்க வீரராக களமிறங்கிய ரோகி ஷர்மா 7(8) ரன்களில் வெளியேற, மறுமுனையில் இருந்த ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற விருவிருப்பான இறுதி கட்டத்தினை இந்தியா சந்தித்தது. 16 ஓவருக்கு 161 ரன்கள் எடுத்தது.

5 விக்கெட்கள் கைவசம் உள்ள நிலையில், கடைசி 6 பந்தில் 13 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா இருந்தது. கடைசி ஓவரை ஆஸ்திரேலியா அணியின் வேகபந்து வீச்சாளர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் வீசினார்.

 

முதல் பந்தை குர்னால் பாண்டியா எதிர்கொண்டார். இரண்டு ரன்களை கிடைத்தது. 

இரண்டாவது பந்து வெளிப்புறமாக சென்றததால் குர்னால் பாண்டியாவால் அடிக்க முடியவில்லை. இது ஒய்டாக இருக்குமா? என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடுவர் ஒய்டு கொடுக்கவில்லை. 2_வது பந்தில் ரன் எதுவும் இல்லை. 

மூன்றாவது பந்தை குர்னால் பாண்டியா ஓங்கி அடித்தார். எல்லை கோட்டை தாண்டும் என நினைத்த வேகத்தில், மேக்ஸ்வெல் அழகாக கேட்ச் பிடித்தார். 3_வது பந்திலும் ரன் இல்லை. 

நான்காவது பந்தை தினேஷ் கார்த்திக் எதிர்கொண்டார். அந்த பந்தை வேகமாக அடித்து ஆடினார். ஆனால் பந்தின் வேகம் குறைவாக இருந்ததால், அது கேட்ச்சாக மாறியது. 4_வது பந்திலும் ரன் இல்லை.

இரண்டு பந்தில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில், ஐந்தாவது பந்து வீசினார் மார்கஸ் ஸ்டொய்னிஸ். இந்த பந்து அதிக வெளிப்புறமாக செல்ல, நடுவர் ஒயிட் என அறிவித்தார். இதன்மூலம் ஒரு ரன் இந்தியாவுக்கு கிடைத்தது.

தற்போது 2 பந்தில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் புவனேஷ்வர் எதிர்க்கொண்டார். ஒரு ரன் மட்டுமே கிடைத்தது.

ஒரு பந்தில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி பந்தில் மார்கஸ் ஸ்டொய்னிஸ். அதை பின்புறமாக அடித்து ஆடினார் குல்தீப் யாதவ். இந்தியாவுக்கு நான்கு ரன்கள் கிடைத்தது. 

கடைசி 6 பந்தில் 13 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்ற நிலையில், இந்திய அணி 8 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டி-20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற முக்கிய காரணம், அந்த அணியின் ஆல்-ரவுண்டரான மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆவார். கடைசி ஓவரில் இரண்டு விக்கெட் மட்டுமில்லாமல், 19 பந்தில் 33 ரன்கள் எடுத்தார். இந்த போட்டி மட்டுமில்லை, பல போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற காரணமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.