பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட இலங்கை வீரர்கள் மறுத்துள்ளதாக பாகிஸ்தானின் கூற்றுக்கு இலங்கை மறுப்பு!!
இந்தியா மிரட்டியதால், பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட இலங்கை வீரர்கள் மறுத்துள்ளதாக பாகிஸ்தானின் கூற்றை இலங்கை நிராகரித்துள்ளது. இதுகுறித்து, இலங்கை விளையாட்டு மந்திரி ஹரின் பெர்னாண்டோ பதிவிட்டுள்ள ட்வீட்டில், "பாகிஸ்தானில் விளையாடக்கூடாது என்று இலங்கை வீரர்களை இந்தியா மிரட்டியதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை" என்று கூறியுள்ளார்.
மேலும், "2009 சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சிலர் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்தனர். அவர்களின் முடிவை மதித்து நாங்கள் பயணிக்க விரும்பும் வீரர்களைத் தேர்ந்தெடுத்தோம்." என அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அமைச்சர் பவாத் உசேன் நேரடியாக இந்தியா மீது புகுற்றசாட்டு எழுப்பினார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில்; எனக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, பாகிஸ்தானுக்கு செல்லும் இலங்கை வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என இலங்கை வீரர்களை இந்தியா மிரட்டியுள்ளது. இந்திய விளையாட்டுத்துறையினரின் இத்தகைய செயல் கீழ்த்தரமான, மலிவான ஒன்று. விண்வெளி முதல் விளையாட்டு வரை பாகிஸ்தானுடன் இந்தியா மல்லுக்கட்டி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது என்றார்.
பாதுகாப்பு அச்சம் காரணமாக 10 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் வரவிருக்கும் சுற்றுப்பயணத்திலிருந்து விலகியுள்ளனர். இந்த வீரர்கள் நிரோஷன் டிக்வெல்லா, குசல் ஜானித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, திசாரா பெரேரா, அகில தனஞ்சயா, லசித் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், சுரங்கா லக்மல், தினேஷ் சந்திமல், திமுத் கருணாரத்ன.
முன்னாள் இலங்கை விமானப்படை தளபதி, மார்ஷல் ஏர் ரோஷன் கூனெட்டிலேக், பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மற்றும் இலங்கை அணியின் அந்த நாட்டின் சுற்றுப்பயணத்தின் போது செயல்படுத்த பிசிபி திட்டமிட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வீரர்களுக்கு விளக்கமளித்தார். மார்ஷல் ஏர் ரோஷன் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பாதுகாப்பு ஆலோசகராக உள்ளார்.
செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 9 வரை இலங்கை 03 ODIs மற்றும் 03 T20i போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது, ஆனால் செல்ல விரும்பிய வீரர்களை மட்டுமே உள்ளடக்கும். கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் அணியினர் பயணம் செய்த பேருந்து மீது தீவிரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். அதில், சில இலங்கை அணி வீரர்கள் சிலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.